சென்னை: இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகள் வழியாகச் செல்லும்போது வாகனவோட்டிகள் ஒலிப்பானைப் (ஹார்ன்) பயன்படுத்தக்கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்பில் சுற்றுச்சூழல், காலநிலை, வனத்துறைச் செயலாளர் செந்தில் குமார் ஓர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில், “அதிகாரிகளிடமிருந்து எழுத்துபூர்வ அனுமதி பெறாமல், எந்தப் பகுதியிலும் ஒலிபெருக்கி உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது. அவசர காலங்கள் தவிர, இரவு நேரங்களில் பொதுவெளியில் ஒலிபெருக்கி, இசைக் கருவிகள் இசைப்பது போன்றவற்றைப் பயன்படுத்துவது கூடாது.
“குடியிருப்பு மற்றும் அமைதி மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில், அவசரகாலங்கள் தவிர, இரவு நேரங்களில் ஹார்ன் அடிக்கக்கூடாது. அமைதி மண்டலங்களிலும், இரவு நேரங்களிலும் பட்டாசு வெடிக்கக்கூடாது. அமைதி மண்டலங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் கட்டடப் பணிகளின்போது ஒலி எழுப்பும் கருவிகளை பயன்படுத்தக்கூடாது,” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இவ்விதிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணித்து, மீறுவோர்மீது அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

