சென்னை: கவனம் பெறாத துறைகளில் கவனம் செலுத்தி புதிய திட்டங்களை உருவாக்கித் தரும்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநிலத் திட்டக் குழுவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் மாநில திட்டக்குழுவின் ஐந்தாவது கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெற்றது.
அப்போது பேசிய திரு ஸ்டாலின், “மாநிலத்தின் வளர்ச்சி என்பது சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
“தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளியல் வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும்.
“ஏற்றத்தாழ்வு என்பது பொருளியல் ரீதியாக மட்டுமன்று, சமூக ரீதியாகவும் இல்லை என்பதை உருவாக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான், கடந்த மூவாண்டுகளாக எண்ணற்ற திட்டங்களைத் தீட்டினோம்,” என்று பேசினார்.
இன்னும் பல புதிய திட்டங்கள் வர இருப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர், கவனம் பெறாத துறைகளில் கவனம் செலுத்தி புதிய திட்டங்களை உருவாக்கித் தருமாறு மாநில திட்டக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், நிதிவளம் இருக்குமானால் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதால் நிதிவளம் பெருக்க ஆலோசனை வழங்குமாறும் அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் ஒவ்வொன்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் உயர்த்தி வருவதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“அனைத்து மாவட்டங்களையும் தன்னிறைவு பெற்றவையாக உருவாக்கினோம். எல்லா வளங்களும் உள்ளன என்ற நிலைமையை உருவாக்கி வருகிறோம். கல்வித் துறையில், வேளாண்மையில், உள்கட்டமைப்பு வசதியில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக வளர்ந்துவிட்டது. அனைத்துத் துறைகளும் சமச்சீராக வளர்ந்து வருகின்றன,” என்று அவர் கூறினார்.
மேலும், மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கை, மிக மிக மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகவும் திரு ஸ்டாலின் சொன்னார்.