சென்னை: மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இத்திட்டத்தால் பல்லுயிர் பெருக்கமும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனக் கவலை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சு சார்பாக, இத்திட்டத்துக்கான ஏல அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, பிரதமருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ள முதல்வர் ஸ்டாலின், கடல் தேசியப் பூங்காவை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடற்பகுதி, உயிர்க்கோளக் காப்பகமாக ஒன்றிய அரசால் 1989ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.
“இது பவளப்பாறைகள், கடல் புல் படுகைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், சேற்றுப் படுகைகள், தீவுகள் மற்றும் காடுகள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கிய வளமான பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டுள்ளது.
“இந்த உயிர்க்கோளக் காப்பகம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரையில் இருந்து 560 சதுர கி.மீ பரப்பளவில், பரந்து விரிந்து கிடக்கும் 21 தீவுகள் மற்றும் அருகிலுள்ள பவளப்பாறைகளின் சங்கிலியைக் கொண்டுள்ளது.
“பல்வேறு வகையான கடல் விலங்கினங்களின் புகலிடமாகவும் விளங்கி வருகிறது,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தப் பகுதியில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயுவிற்கான ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கப்பட்டால் அது சுற்றுச்சூழல் அமைப்பு, வளமான பல்லுயிர் பெருக்கம், கடல்வாழ் உயிரினங்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று திரு ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“மேலும், மன்னார் வளைகுடாவை நம்பியுள்ள இலட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். இது கடலோரச் சமூகங்களிடையே பெருத்த அச்சத்தை உருவாக்கி உள்ளது.
“துரதிர்ஷ்டவசமாக, இந்த ஏல அறிவிப்புக்கு முன்னர் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசிடம் கருத்து எதையும் கேட்கவில்லை. இந்த முக்கியமான பிரச்சினையில் இந்தியப் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்,” என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

