சென்னை: சிறந்து விளங்கும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஹாங்காங்கிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பல்வேறு திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அவ்வகையில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பள்ளி அளவில் இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், வானவில் மன்றம், கலைத் திருவிழா, சிறாா் திரைப்பட மன்றம் தொடா்பான பல போட்டிகள் நடத்தப்பட்டன.
அவற்றில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தொடா்ந்து, மாநில அளவிலான போட்டிகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்தன.
மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களில் 20 போ், தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியை ஒருவா், அலுவலா் ஒருவா் ஆகியோர் கல்விச் சுற்றுலாவிற்காக ஹாங்காங் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசும் அவர்களுடன் சென்றுள்ளார். இம்மாதம் 22ஆம் தேதி தொடங்கிய அவர்களின் பயணம், 27ஆம் தேதியுடன் நிறைவுறும்.
இதுகுறித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், “அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களுடன் ஹாங்காங் சென்றடைந்தோம். அங்குள்ள டிஸ்னிலேண்ட் பூங்காவிற்கு மாணவச் செல்வங்களை அழைத்துச் சென்றோம். மாணவர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ள எங்களின் பயண வழிகாட்டிகளுக்கு நன்றிகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.