சென்னை: தமிழ் கல்வெட்டு மைப்படிகள் நெடுங்காலமாகத் தொல்லியல் துறையின் மைசூர் கிளையில் வைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த மைப்படிகள் இப்போது, சென்னை கிளைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தக் கல்வெட்டு மைப்படிகள் அனைத்தையும் மின்மயமாக்கி, ஆய்வு மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் விரைவில் வெளியிடப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழ் நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சின்னங்கள் தமிழகத்தில் உள்ளன. அவற்றை அழியக்கூடிய சூழலில் இருந்து பாதுகாத்து மின்மயமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் நகரத்தின் மலைக்குகையில் பராந்தகச் சோழனின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டு, கல்வட்டங்கள், கற்பதுகைகள் போன்றவை சோளிங்கர் நகரத்தை அடுத்த கரிக்கல் கிராமத்தில் அமைந்துள்ளன.
புகழ்பெற்ற மகேந்திரவாடி குடைவரைக் கோயிலுக்கு அருகில் உள்ள கோடம்பாக்கம் கிராமத்தில் கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலப் பாறைக் கல்வெட்டு ஒன்றும் பதிவு செய்யப்படாமல் பாதிக்கப் படும் நிலையில் உள்ளது.
மேலும் தனியார் நிலங்களில் உள்ள நினைவுக் கற்கள், கொற்றவை, தவ்வை, ஐயனார் உள்ளிட்ட பண்பாட்டு அடையாளங்கள், ஏரித் தூம்பு, குமிழி, மதகு கல்வெட்டுகள் என ஏராளமான பண்பாட்டு அடையாளங்கள் உள்ளன. அவை அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.
இவை பெரும்பாலும் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளன. இவற்றையும் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்களாக அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தமிழ் நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

