சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய தமிழக ஆளுநர் ரவி

2 mins read
9b7704af-4437-4f67-8e70-39d588ec19db
ஆளுநர் ரவி. - படம்: சமயம் தமிழ்
multi-img1 of 2

சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் தம்மைப் பேச அனுமதிக்கவில்லை என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், சட்டப் பேரவையில் ஆளுநர் பேச முற்பட்டபோது, அவர் பயன்படுத்திய ஒலிப்பெருக்கி மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

ஆனால் தேசிய கீதம் பாடப்படாததால் ஆளுநர் ரவி தாம் வாசிக்க வேண்டிய உரையைப் புறக்கணித்து பேரவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த உரையை தமிழக அரசு தயாரித்து ஆளுநருக்கு அனுப்பி வைப்பது வழக்கம். மரபும்படி இந்த உரையை ஆளுநர் ஆங்கிலத்தில் வாசிக்க சபாநாயகர் அதன் தமிழாக்கத்தை வாசிப்பார்.

ஆனால், ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. பேரவைக் கூட்டத்தொடரின் போது தேசிய கீதம் பாடப்பட வேண்டுமென ஆளுநர் வலியுறுத்தி வருகிறார். இதை திமுக அரசு ஏற்கவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தேசிய கீதம் இசைக்கப்படாததைக் கண்டித்து, பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆளுநர் என்பவர் மக்கள் நலனில் அக்கறையுள்ளவராக இருக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை மரபுகளை, சட்ட விதிகளை ஆளுநர் மீண்டும் ஒருமுறை மீறி விட்டதாக குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், ஆளுநரின் இந்த செயல் அவர் வகிக்ககூடிய பதவிக்கு அழகல்ல என்றார்.

“நூறாண்டுகால மரபையும் நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட மக்கள் சபையை ஆளுநர் அவமதித்து விட்டதாக கருதுகிறேன்.

மாநில ஆளுநர் உண்மையை பேசுபவராக இருக்க வேண்டும்,” திரு ஸ்டாலின் கூறினார்.

இதையடுத்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை தமிழக சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

தமிழக அரசால் தயார் செய்யப்பட்ட ஆளுநர் உரையில் ஆதாரமற்ற கூற்றுகளும் தவறான தகவல்களும் இடம் பெற்றுள்ளதாகவும் மக்களைப் பாதிக்கும் பல முக்கிய பிரச்சினைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு ரூ.12 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுவது உண்மைக்கு மாறானது என்று குறிப்பிட்டுள்ள ஆளுநர் ரவி, பல முதலீட்டார்களுடன் கையெழுத்து இடப்பட்டுள்ள பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே உள்ளன என்றும் உண்மையான முதலீடு மிக குறைவாகவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து உரையில் எந்த குறிப்புமில்லை. போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான பாலியல் வழக்குகள் 55% அதிகரித்துள்ளன.

“போதை பொருள்கள் பரவலும், பள்ளி‌மாணவர்கள் உள்பட இளைஞர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது,” என ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்