சென்னை: நடப்புக் கல்வியாண்டில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதற்காகத் தமிழக அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யவுள்ளது.
இதன்மூலம் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 160,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களில் உயர்கல்வியை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்தக் கல்வி உதவித்தொகைத் திட்டம் தொடங்கப்பட்டது.
அதன்படி, ஒற்றைச் சாளர முறையின்கீழ் பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும். இதில் வருமானம், சாதி என எந்தப் பாகுபாடும் பார்க்கப்படாது.
அவ்வகையில், கடந்த 2023-24 கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 157,342 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.379.31 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டதாக உயர்கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“கடந்த 2021-22 கல்வியாண்டில் 146,559 மாணவர்களுக்கு ரூ.353.34 கோடியும், 2022-23 கல்வியாண்டில் 145,695 மாணவர்களுக்கு ரூ.356.11 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையானது மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடரவும், கல்லூரிகளில் இருந்து இடைநிற்றலைத் தவிர்த்து, அவர்கள் தங்கள் படிப்பை முழுமையாக நிறைவுசெய்யவும் உதவுகிறது,” என்று அவ்வதிகாரி கூறினார்.
இந்நிலையில், 2024-25 கல்வியாண்டில் அதிகமான மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதால், 1.65 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகைமூலம் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
உதவித்தொகை கோரும் மாணவர்கள் இவ்வாண்டு மின்னணுப் படிவம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், மின்னிலக்கம்வழி கையெழுத்திட்ட மின்னணுச் சான்றிதழையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“விண்ணப்பதாரரின் சகோதரரோ சகோதரியோ ஏற்கெனவே முதல் தலைமுறைப் பட்டதாரிக்கான கல்விக் கட்டணச் சலுகையைப் பெற்றிருப்பின், அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
உதவித்தொகைக்குத் தகுதிபெறும் மாணவர்களின் கல்விச் செலவுகளுக்காக ஒவ்வோர் ஆண்டும் ரூ.25,000 வழங்கப்படும்.
உதவித்தொகைக்குத் தகுதிபெறும் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட, பதிவு செய்வதிலிருந்து உதவித்தொகை வழங்குவது வரை முற்றிலும் இணையவழிச் செயல்முறையாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.