தூத்துக்குடி: தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்காக மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தூத்துக்குடியில் விரிவுபடுத்தப்பட்ட விமான நிலையத்தையும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி தமிழகத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு நடைபெற்ற விழாவில் ரூ.452 கோடி செலவில் அனைத்துலகத் தரத்தில் கட்டப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதையடுத்து, தமிழகத்தில் ரயில்வே துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,032 கோடி மதிப்பிலான பணிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் முடிக்கப்பட்டுள்ள ரூ.2,557 கோடி மதிப்பிலான பணிகள் ஆகியவற்றையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.548 கோடி மதிப்பிலான மின் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
பின்னர், தனது உரையைத் தொடங்கியபோது, ‘அனைவருக்கும் வணக்கம்’ என்று தமிழில் குறிப்பிட்ட அவர், தமது வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
“நாட்டின் வளர்ச்சிக்கு தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது. 2014ஆம் ஆண்டிலேயே தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கான பயணம் தொடங்கிவிட்டது.
“இன்று ரூ.4,900 கோடி மதிப்பில் ரயில்வே, எரிசக்தி திட்டங்கள், சாலைகள், விமான நிலையம் போன்ற பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு இந்தியா தன்னம்பிக்கையுடன் முன்னேறிக்கொண்டே வருகிறது,” என்றார் பிரதமர் மோடி.
தொடர்புடைய செய்திகள்
விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழக அரசு சார்பில் கலந்துகொண்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டத்தின் மாதிரியை நினைவுச்சின்னமாக வழங்கினார்.
தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடியை அளித்துள்ளதாகவும், இது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப்பட்ட தொகையைவிட 3 மடங்கு அதிகமாகும் என்றும் திரு மோடி கூறினார்.
“இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தால் இந்தியா பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. தமிழகத்தின் ஆற்றல் வளத்தை மேம்படுத்த, தூத்துக்குடி துறைமுகக் கட்டமைப்பை உயர் தொழில்நுட்பத்துடன் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இங்கு ரூ.450 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள விமான முனையம் ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும்.
“தமிழகத்தில் ரூ.2,500 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள சாலைத் திட்டங்களால் வர்த்தகம், வேலைவாய்ப்புக்கான பாதைகள் திறக்கும். தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 11 ஆண்டுகளில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன,” என்றார் பிரதமர் மோடி.
பிரிட்டன் உடனான வணிக ஒப்பந்தம் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் பொருளியல் ரீதியாக உலகின் மூன்றாவது பெரிய நாடு என்று வளர்ச்சியை இது வேகப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
“இந்தியாவின் முதல் செங்குத்து ரயில் தூக்கு பாலம் தமிழகத்தின் பாம்பனில் கட்டப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தி திட்டம் தமிழகத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டு பில்கேட்சுக்கு தூத்துக்குடி முத்துக்களை பரிசளித்தேன். இங்கு காணப்படும் முத்துக்கள் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை,” என்றார் பிரதமர் மோடி.