திருநெல்வேலி: தமிழ்நாட்டுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதியும் இல்லை, நீதியும் இல்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரக்தியுடன் விமர்சித்து உள்ளார்.
இருநாள் பயணமாக திருநெல்வேலி சென்ற ஸ்டாலின், அங்கு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) 75,151 பயனாளிகளுக்கு ரூ.167 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ரூ.309 கோடியிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற திட்டங்களையும் திறந்து வைத்தபின் அவர் உரையாற்றினார்.
“தமிழகத்தை மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு. இந்தியாவின் வரைபடத்தில் மட்டும் தமிழகம் இருந்தால் போதுமா, அரசு வெளியிடுகிற நிதிநிலை அறிக்கையில் இருக்க வேண்டாமா, மத்திய அரசின் திட்டங்களில் தமிழகத்தின் பெயர் இருக்க வேண்டாமா?
“திருநெல்வேலி அல்வா என்றால் உலகளவில் பிரபலமானது. ஆனால், இப்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் அதைவிட பிரபலமாக இருக்கிறது,” என்று ஸ்டாலின் கூறினார்.
நெல்லையில் மழை பாதிப்புக்காக மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டோம். இடைக்கால நிதியுதவி கூட மத்திய அரசு செய்யவில்லை. நிவாரணம் வழங்காததைக் கண்டித்தோம், அப்போதும் மத்திய அரசு தரவில்லை. நீதிமன்றம் சென்ற பிறகுதான் மத்திய அரசு ரூ.276 கோடி வழங்கியது. மழை வெள்ள நிவாரணமாக தமிழ்நாடு அரசு கேட்ட ரூ.37,907 கோடியில் ஒரு விழுக்காடு நிதிகூட மத்திய அரசு வழங்கவில்லை என்றார் ஸ்டாலின்.
கடந்த 2023 டிசம்பர் மாதம் எப்படிப்பட்ட கனமழை பெய்தது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த கனமழையால் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டன என்பதும் நமக்குத் தெரியும்.
அந்தப் பாதிப்புகளில் இருந்து மீள மத்திய அரசிடம் தமிழக அரசின் சார்பில் நிதி கோரினோம். இரண்டு மத்திய அமைச்சர்கள் தமிழகம் வந்தனர். ஆனால், அவர்கள் இடைக்கால நிதி உதவிக்குக்கூட ஏற்பாடு செய்யவில்லை.
இருப்பினும் மாநில அரசின் நிதிகளை வைத்து, நிவாரணப் பணிகளை நாம் செய்தோம். தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியும் நிதி வரவில்லை. நீதிமன்றம் சென்ற பிறகுதான், தமிழகத்துக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியை அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
வெள்ள நிவாரணமாக நாம் கேட்டது ரூ.37,907 கோடி. ஆனால், மத்திய அரசு கொடுத்தது வெறும் ரூ.276 கோடி. நாம் கேட்ட நிதியில் ஒரு விழுக்காட்டைக்கூட அது கொடுக்கவில்லை.
இப்படித்தான் மத்திய அரசு நடந்துகொண்டிருக்கிறது. சரி போகட்டும், இந்த பட்ஜெட்டிலாவது தமிழகம் கோரிய நிதியை ஒதுக்கித் தருவார்கள் என எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று ஒதுக்கிவிட்டார்கள் என்று ஸ்டாலின் கூறினார்.
தமிழக வரலாற்றுப் பெருமைக்கு அடையாளம் நெல்லை மண்தான். சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்ட மண் திருநெல்வேலி என்று கூறிய மு.க.ஸ்டாலின், எந்த ஆட்சியாக இருந்தாலும் மிக முக்கியமான நகரமாக நெல்லை இருந்து வருகிறது என்றார்.
பாண்டியர், சோழர், ஆங்கிலேயர் காலத்திலும் நெல்லை சிறப்பான நகரமாக விளங்கியது.
பொருநை ஆற்றின் கரையில் 3,700 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிடப்பட்டு உள்ளது என்பது நிரூபணம் ஆகி உள்ளது என்று நெல்லையின் பெருமைகளைப் பேசிய அவர், நெல்லையப்பர் கோவிலில் வரும் நவம்பர் மாதத்திற்குள் வெள்ளித் தேர் ஓடும், ஏப்ரல் மாதத்திற்குள் பொருநை கண்காட்சி அமைக்கப்படும் என்றார்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள்:
*நாங்குநேரி அருகே 2291 ஏக்கர் பரப்பளவில் 2 புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள்.
*குலவணிகர்புரத்தில் ரூ.120 கோடி ‘ஒய்’ வடிவ புதிய ரயில்வே மேம்பாலம்.
*தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம்.
*பாபநாசம் கோயில் வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள்.
*மேலப்பாளையத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம்.
நெல்லை மாவட்டத்துக்கு அறிவித்த திட்டங்களுக்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.