சென்னை: தமிழ்நாட்டுக் குடும்பங்களிடம் ஏறக்குறைய 6,720 டன் தங்கம் இருப்பதாக உலகத் தங்க மன்றத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியர்களைப் பொறுத்தமட்டில், தங்கம் அவர்களின் பண்பாட்டு, ஆன்மிக, சமூக வாழ்க்கையுடன் தொடர்புடையது.
ஒட்டுமொத்தமாக இந்தியக் குடும்பங்களிடம் 34,600 டன் தங்கம் இருக்கிறது என்றும் அதன் மதிப்பு 3.8 டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$4.94 டிரில்லியன்) என்றும் மோர்கன் ஸ்டேன்லி நிறுவனம் கடந்த அக்டோபரில் வெளியிட்ட ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது.
அந்த 34,600 டன் தங்கத்தில் தென்னிந்தியப் பெண்களிடம் 45 விழுக்காடு இருப்பதாகவும் அவர்களில் தமிழகப் பெண்களே முன்னிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அமெரிக்க அரசு 8,000 டன் தங்கத்தைக் கையிருப்பு வைத்துள்ளது. ஜெர்மனி (3,300 டன்), இத்தாலி (2,450 டன்), ரஷ்யா (1,900 டன்) ஆகிய நாடுகளெல்லாம் தமிழகக் குடும்பங்களை நெருங்க முடியவில்லை.
வரிவிதிப்புகள் மாறினாலும் இளந்தலைமுறையினரின் பார்வை மின்னிலக்கச் சொத்துகள்மீது திரும்பினாலும், தமிழ்நாட்டில் முதலீட்டைப் பொறுத்தமட்டில் தங்கமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகச் சிறப்புக் கட்டுரை குறிப்பிடுகிறது.
“இந்தியாவில் பல தலைமுறைகளாகவே தங்கம் ஒரு மதிப்புமிக்க சேமிப்பாகப் பார்க்கப்படுகிறது,” என்று அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நகை வணிகர் எம். ரகுராமன் கூறினார்.
தமிழக மக்களின் தங்கம் வாங்கும் மரபை வருமானம் தரும் முதலீடாகப் பார்க்காமல் சொத்து உருவாக்கமாகக் கருத வேண்டும் என்கிறார் தங்க, வைர வணிகர் சங்கத் தலைவரான ஜெயந்திலால் சலானி.
தொடர்புடைய செய்திகள்
வரும் 2028ஆம் ஆண்டிற்குள் தங்கத்தின் விலை 150 விழுக்காடுவரை உயரலாம் என்பது அவரது கணிப்பு. அனைவரும் முன்னுரிமை தரும் அனைத்துலக நாணயம் எனும் தகுதிநிலையைத் தங்கம் பெறலாம் என்றும் அவர் சொல்கிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக ரூபாய் மதிப்பின் அடிப்படையில் தங்கத்தின் மதிப்பு ஆண்டுதோறும் 8%-10% கூடியிருக்கிறது என்றும் இது மற்ற அசையாச் சொத்துகளைவிட அதிகம் என்றும் திரு ரகுராமன் குறிப்பிட்டார்.
நடுத்தர, கீழ்நிலை நடுத்தர வருமானக் குடும்பங்களுக்குத் தங்க நகை ஒரு முக்கியமான முதலீடு என்கிறார் முதலீட்டு ஆலோசகர் வி. நாகப்பன். அதே நேரத்தில், இளந்தலைமுறையினர் தங்க நகைகள்மீது ஆர்வம் செலுத்துவதில்லை என்றும் மாறாக, வெள்ளி ‘இடிஎஃப்’ பங்குகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர் என்றும் அவர் சொன்னார்.

