சென்னை: நிலத்தை அளக்க இணையம் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நிலம் எனும் இணையத்தளம் வழியாக விண்ணப்பம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது நிலத்தை அளவீடு செய்வதற்கு இதுவரை நேரில் சென்று அதிகாரிகளைக் கண்டு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இதனால் கால தாமதம், கையூட்டு போன்ற பிரச்சினைகள் எழுந்தன. இதனையடுத்து, தமிழ்நாடு அரசு நிலம் தொடர்பான இணையவழிச் சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
நில அளவீடு செய்ய இணையம் வழியாக விண்ணப்பித்தபின் அதிகாரிகள் நிலத்தை அளக்க வரும் தேதி உள்ளிட்ட விவரம் அடங்கிய குறுஞ்செய்தி விண்ணப்பதாரரின் கைப்பேசிக்கு அனுப்பப்படும்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நில அளவை தொடர்பாக அந்தந்தப் பகுதி அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையத்தளம் வழியாக விண்ணப்பிக்கும் வசதி கடந்த 2023ஆம் ஆண்டே தொடங்கி வைக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-சேவை மையங்கள் மூலம் இவ்வசதியைப் பெற முடியும். நில உரிமையாளர்கள் இ-சேவை மையங்களை அணுகி தேவையான கட்டணங்களைச் செலுத்த வேண்டும். நிலத்தை அளவிடும் தேதி விண்ணப்பதாரருக்குக் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
நில அளவீடு முடிந்ததும், நில உரிமையாளர் மற்றும் அளவீட்டாளரின் (சர்வேயர்) கையொப்பத்துடன் அளவிடப்பட்ட நிலத்தின் வரைபடம் இணையத்தில் பதிவேற்றப்படும். அதன்பின் விண்ணப்பதாரர் https://eservices.tn.gov.in என்ற இணையத்தளம் வழியாக அதனைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

