தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகளிர் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழகம்: அரசு பெருமிதம்

2 mins read
919cf96f-d805-45f6-aaeb-8474894eaa03
பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கும் நோக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. - படம்: ஊடகம்
multi-img1 of 2

சென்னை: மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக பல்வேறு புதிய திட்டங்களைத் தொடர்ந்து அறிவித்து, அவற்றை நிறைவேற்றி வருவதாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், தமிழக அரசு மகளிர் முன்னேற்றத்துக்காகச் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மகளிர் விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப் பெண் திட்டம், பணிபுரியும் மகளிர்க்கு தோழி விடுதிகள் திட்டம், அரசுப் பணிகளில் மகளிர்க்கு 40% இட ஒதுக்கீடு திட்டம், சுய உதவிக்குழு மகளிருக்கு கடன் வரம்பை அதிகரிக்கும் திட்டம் ஆகியவை சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை மதிப்பிட இயலும் என்றும் பாலின வேறுபாடுகளைக் களைந்து, பெண்களுக்கான சமூகநீதி, பொருளியலை மேம்படுத்தும் நோக்கத்துடன் ‘தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024’ வெளியிடப்பட்டது என்றும் அரசு கூறியுள்ளது.

இது மகளிர் உரிமைக்கு வழிவகுத்துள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளது.

“பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்கள் ஆகியோருக்கான கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்தில் இதுவரையில் 682.02 கோடி முறை அவர்கள் பயணம் செய்துள்ளனர். திருநங்கைகள் 36.89 லட்சம் முறையும் மாற்றுத்திறனாளிகள் 3.78 கோடி முறையும் பயணம் செய்து பயனடைந்துள்ளனர்.

“இத்திட்டத்தின் பயனாக, மகளிர் மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெற்று மகிழ்கின்றனர்,” எனத் தமிழக அரசு கூறியுள்ளது.

ஏழை மக்களின் குடும்பங்களிலும் கிராமப் பொருளாதாரத்தைச் சுமக்கும் முதுகெலும்பாகப் பெண்கள் திகழ்கிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கும் நோக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தில் இதுவரை 1.15 கோடி மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெற்று வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உயர் கல்வி நிறுவனங்களில், இளநிலைப் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் 495,000 மாணவியர்க்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவதாகவும் இதனால் பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரிகளில் சேரும் மாணவியர் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளதாகவும் மாநிலத் திட்டக் குழுவின் ஆய்வறிக்கை கூறுகிறது.

“கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக் கடன்களில் 31.3.2021 அன்றைய தேதியில் நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.2,755.99 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. 1,17,617 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 15,88,309 மகளிர் பயன்பெற்றுள்ளனர்,” என்று தமிழக அரசு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்