ஆளுநர் பதவிக்கு ஆசைப்பட்டு ரூ. 5 கோடியை இழந்தார்

2 mins read
e1bff2eb-ddd5-4765-87d2-20522093f8a0
நிரஞ்சன் குல்கர்னி வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனை. - படம்: இந்திய ஊடகம்

மும்பை: மாநில ஆளுநர் பதவிக்கு ஆசைப்பட்ட தமிழ்நாட்டு ஆடவர் ஒருவர் மகாராஷ்டிராவில் 5 கோடி ரூபாயை இழந்துள்ளார்.

மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இவ்வாண்டு ஜனவரி 12ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த நரசிம்ம ரெட்டி என்பவர் தங்கி இருந்தார். அப்போது நிரஞ்சன் குல்கர்னி என்பவர் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அந்தச் சந்திப்பின் போது, நரசிம்ம ரெட்டிக்கு இந்தியாவின் ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி வாங்கித் தருவதாக நிரஞ்சன் வாக்குறுதி அளித்தார்.

பாஜக தலைவர்கள் பலருடன் தமக்கு மிக நெருக்கமான தொடர்பு உள்ளது என்றும் ரூ.15 கோடி பணம் கொடுத்தால் மாநில ஆளுநர் பதவியைத் தம்மால் வாங்கித் தரமுடியும் என்றும் நரசிம்ம ரெட்டியிடம் அவர் பேரம் பேசினார்.

அது மோசடி என்று தெரியாமல் ஆசை வார்த்தையை நம்பி நிரஞ்சன் விரித்த வலையில் நரசிம்ம ரெட்டி சிக்கினார்.

பிப்ரவரி 7ஆம் தேதி நரசிம்ம ரெட்டியை மீண்டும் சந்தித்த நிரஞ்சன், “வாக்குறுதி அளித்தபடி ஆளுநர் பதவியைப் பெற்றுத்தராவிட்டால் ரூ.15 கோடிக்கு ஈடாக எனது 100 ஏக்கர் நிலத்தை எழுதித் தருகிறேன். இதோ ஆவணங்கள்,” என்று சில பத்திரங்களைக் காட்டியுள்ளார்.

அவற்றைக் கண்டதும் நரசிம்ம ரெட்டியின் நம்பிக்கை அதிகரித்தது.

ஆளுநர் பதவி வந்துவிடும் என்ற நம்பிக்கையில், உடனே 60,000 ரூபாய் ரொக்கப் பணத்தை நிரஞ்சனிடம் அவர் கொடுத்தார். தொடர்ந்து, பிப்ரவரி 7 முதல் ஏப்ரல் 2 வரை ரூ.4.48 கோடியை நிரஞ்சனின் வங்கிக் கணக்கிற்கு அவர் அனுப்பினார்.

ஆனால், நாள்கள் செல்லச் செல்ல ஆளுநர் பதவியும் வரவில்லை; நிரஞ்சனையும் காணவில்லை.

தாம் மோசடி செய்யப்பட்டதைத் தாமதமாக உணர்ந்த நரசிம்ம ரெட்டி, நாசிக் நகரக் காவல்துறையில் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 7) நிரஞ்சன் குல்கர்னிக்கு எதிராகப் புகார் தெரிவித்தார்.

உடனடியாக விசாரணையில் இறங்கிய காவல்துறை, நிரஞ்சன் குல்கர்னியை அவரது வீட்டில் கைது செய்து, பத்து நாள் விசாரணைக் காவலில் வைத்துள்ளது. மேலும், அவரது வீட்டில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அரசியலுக்குத் தொடர்பு இல்லாத ஒருவர் ஆளுநர் பதவிக்கு ஆசைப்பட்டு மோசம் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்