திருச்சி: மத்தியக் கிழக்குப் பகுதியான ஷார்ஜாவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய தமிழக ஆடவர் ஒருவரிடம் குரங்கம்மைத் தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானைச் சேர்ந்த அந்த ஆடவர் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 31) தீபாவளி நாளன்று அதிகாலை ஷார்ஜாவிலிருந்து திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார்.
அவருக்குக் குரங்கும்மைத் தொற்று அறிகுறிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
விமான நிலையத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரைப் பரிசோதனை செய்தனர். காய்ச்சல், உடலில் கொப்புளங்களுடன் அந்த ஆடவர் சோர்வாக இருந்தது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவில் அவரைச் சேர்த்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முற்பட்டனர். ஆனால், அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். திருச்சியில் தனக்கு உதவ யாரும் இல்லாததால், திருவாரூர் வந்துவிட்டதாக அப்போது அவர் கூறினாராம்.
திருவாரூர் மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லை என்று அவரிடம் காவல்துறையினரும் மருத்துவர்களும் எடுத்துக் கூறினர். பின்னர் அவர் மீண்டும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தனிப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அவருக்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்விற்காகப் புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

