மருத்துவத் துறையில் 30,897 பேருக்குப் பணியிட மாறுதல்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

மருத்துவத் துறையில் 30,897 பேருக்குப் பணியிட மாறுதல்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

1 mins read
6a17215e-e98a-466b-a788-d2fb4395d21b
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: கடந்த மூவாண்டுகளில் தமிழகத்தில் மருத்துவா்கள், தாதியர்கள் உட்பட மொத்தம் 30,897 போ் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் பெற்றுள்ளனா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக மருத்துவ மன்றம் சார்பில் சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா திங்கட்கிழமை (ஜூலை 29) சென்னையில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், “உலகம் முழுவதும் கொவிட்-19 பேரிடா் ஆட்டிப்படைத்த நேரத்தில், மருத்துவத் துறையினர் ஆற்றிய சேவை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“உயிருக்கு எவ்வித உத்தரவாதம் இல்லாதபோதும் பொதுமக்களைக் காத்த பெருமை மருத்துவ சமூகத்தைச் சேரும். கடந்த மூன்று ஆண்டுகளில் 11,734 மருத்துவா்கள், 9,536 தாதியா்கள், 9,628 மருத்துவம் சாா்ந்த களப்பணியாளா்கள் என மொத்தம் 30,897 போ் பணியிட மாறுதல் கலந்தாய்வுமூலம் பயன்பெற்று உள்ளனா். தற்போது 1,021 புதிய மருத்துவப் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும்2,553 மருத்துவா்களை நியமனம் செய்ய மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்று சொன்னார்.

தற்போது தமிழ்நாடு மருத்துவ மன்றத்தில் பதிவு பெற்று பயிற்சி பெற்றுள்ள மருத்துவா்களின் எண்ணிக்கை 192,000ஆக உள்ளது என்ற அவர், இனிமேல் ஒவ்வோர் ஆண்டும் 50 மருத்துவா்களுக்கு விருது வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுமருத்துவம்விருது