தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்நாடு: மின்வாகனங்களுக்காக பொது மின்னூட்ட மையம் அமைக்க திட்டம்

2 mins read
7a699122-c052-4f78-a13c-0dee2dc99cf9
சென்னை மாவட்டத்தில் மட்டும் மாநகராட்சியுடன் இணைந்து 100 இடங்களில் பொது மின்னூட்ட மையங்களை நிறுவ பசுமை எரிசக்திக் கழகம் திட்டமிட்டுள்ளது. - கோப்புப்படம்: சென்னை மெட்ரோ ரயில்

சென்னை: மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்வதற்கான வசதி எளிதில் கிடைக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மாநிலம் முழுவதும் பொது மின்னூட்ட மையங்களை அமைப்பதற்குத் தமிழக மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் வகையில், பெட்ரோல், டீசல் போன்ற திரவ எரிபொருள்களில் இயங்கும் வாகனங்களுக்குப் பதிலாக, மின்கலம், ‘சிஎன்ஜி’ எரிவாயுவில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

அவ்வகையில், பலரும் மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். ஆயினும், அவற்றுக்கு மின்னூட்டம் செய்வதற்கான வசதி எளிதில் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மின்வாகனங்களுக்கு எளிதில் மின்னூட்ட வசதி கிடைக்க ஏதுவாக, தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 25 கிலோமீட்டர் தொலைவிற்கும் நகரங்களில் ஒவ்வொரு மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கும் ஒரு மின்னூட்ட மையத்தை அமைக்கும்படி இந்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதற்கேற்றபடி, முதற்கட்டமாக 100 துணை மின்னிலையங்களில் காலியாக இருக்கும் இடங்களில் மின்னூட்ட மையங்களை அமைக்க தமிழக மின்வாரியம் முடிவுசெய்தது.

ஆனால், நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அதற்கான பணிகள் இடம்பெறவில்லை.

இந்நிலையில், பசுமை மின்திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், மின்வாரியத்தின் துணை நிறுவனமான மின்னுற்பத்தி, மின்பகிர்மானக் கழகத்திலிருந்து பசுமை எரிசக்திக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனம் உள்ளாட்சி அமைப்புகளுடன் கைகோத்து பொது மின்னூட்ட மையங்களை அமைப்பதற்கு முடிவுசெய்திருக்கிறது.

அதன்படி, சென்னை மாவட்டத்தில் மட்டும் மாநகராட்சியுடன் இணைந்து 100 இடங்களில் பொது மின்னூட்ட மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.

அதுபோல, மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் ஐந்து முதல் பத்துப் பொது மின்னூட்ட மையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து விவரித்த மின்வாரிய அதிகாரிகள், “முக்கிய நகரங்களில் பொது மின்னூட்ட மையங்கள் அமைப்பதற்குத் தகுந்த, போதிய இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது.

“ஆகையால், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் பொது மின்னூட்ட மையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் தமிழகம் முழுவதும் தடையின்றி மின்னூட்ட வசதி கிடைக்கும்,” என்றனர்.

குறிப்புச் சொற்கள்