தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இயந்திரக் காவலர்கள் அறிமுகம்

2 mins read
f061f4d1-afc3-4759-b905-1c60bc608db1
சென்னையில் ‘ரெட் பட்டன்– ரோபோட்டிக் காப்’ என்ற புதிய பாதுகாப்புக் கருவி, ஜூன் மாதம் முதல் 200 இடங்களில் வைக்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: பெண்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் புதிதாக இயந்திரக் காவலர்களைத் தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தவுள்ளது.

சென்னையில், ‘ரெட் பட்டன்– ரோபோட்டிக் காப்’ என்ற புதிய பாதுகாப்புக் கருவி, ஜூன் மாதம் முதல் 200 இடங்களில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை காவல்துறை ஆணையர் அருண் மேற்கொண்ட முயற்சியால் இது சாத்தியமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரக் காவலர் கருவியானது 24 மணி நேரமும் இயங்கக்கூடியது. மேலும், 360 டிகிரியில் சுழலக்கூடியது.

பல மீட்டர் தூரம் கண்காணிக்கும் திறன்கொண்ட இந்தக் கருவியில் எளிதில் அழுத்தக்கூடிய சிவப்பு ஆபத்து பொத்தான் இருக்கும். இதை லேசாக அழுத்தினால் போதும், எச்சரிக்கை ஒலி எழுப்புவதுடன் உடனடியாக காவல்துறைக்கு உதவி அழைப்பு செல்லும்.

மேலும், ‘ஜிபிஎஸ்’ மூலம் துல்லிய இட கண்காணிப்பு, உயர்தர கேமரா எனப் பல்வேறு வசதிகள் உள்ளன.

“ரோபோட்டிக் காப் சாதனத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை, ஆபத்தில் இருக்கும் ஒருவர் அல்லது அவருக்காக மற்றொருவர் அழுத்துவதன் மூலம் உடனடியாகக் காவல்துறைக்கு அழைப்பு செல்வதுடன், அருகில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும்.

“ஆபத்தில் உள்ளவர் காணொளி வசதி மூலம் நேரடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு உதவி கோரலாம் என்பதுடன், சுற்றுக்காவலில் ஈடுபட்டுள்ள வாகனங்கள் காணொளி மூலம் நிகழ்வுகளைக் கண்காணித்து உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து வந்து, உரிய நடவடிக்கை எடுத்திட முடியும்,” எனக் காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, கேமராவில் பதிந்துள்ள நிகழ்வுகளைக் கொண்டு புலன் விசாரணையைத் தொடங்கி நடவடிக்கை எடுத்திட பெரிதும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

“சென்னையின் ரயில், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பூங்காக்கள் எனப் பல்வேறு இடங்களில் இந்த இயந்திரக் காவலரின் பணி விரைவில் தொடங்கும் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“இந்தப் புதிய திட்டத்தால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்கள் பாதுகாப்பாக உணர்வார்கள்,” என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்