முதன்முறையாக மின்னிலக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குத் தயாராகும் தமிழகம்

முதன்முறையாக மின்னிலக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குத் தயாராகும் தமிழகம்

2 mins read
1f2decf4-2a00-476b-b3e3-79aa36a855ec
புதிய மின்னிலக்கக் கருவிகள் குறித்து உரிய பயிற்சி வழங்கப்படும் எனத் தமிழக அரசு தெரவித்துள்ளது. - படம்: நியூஸ் 18 தமிழ்

சென்னை: முதன்முறையாக மின்னிலக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு தமிழகம் தயாராகி வருகிறது.

இந்தக் கணக்கெடுப்புக்கான தரவுகளைச் சேகரிப்பது விரைவாகவும் துல்லியமாகவும் வெளிப்படையாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையிலான மாநில ஒருங்கிணைப்புக் குழு கடந்த திங்கட்கிழமை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

அப்போது, மின்னிலக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான செயல்திட்டம், நிர்வாக ஏற்பாடுகளை அக்குழு மதிப்பாய்வு செய்தது.

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்காக தமிழகம் முழுவதும் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் என ஏறக்குறைய 1.5 லட்சம் பேர் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

இவர்கள் வீட்டுப் பட்டியல், வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய கணக்கெடுப்பை மேற்கொள்வர் என்றும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு இந்தப் பணி தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் மக்கள்தொகை, சமூக மற்றும் வீட்டு வசதி தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய 33 கேள்விகள் கேட்கப்படும். மின்னிலக்க அமைப்பானது, காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும், குறைகளைக் குறைத்து, தரவுகளின் செயலாக்கத்தை விரைவுபடுத்தவும் உதவும் என்று கருதப்படுகிறது.

புதிய மின்னிலக்கக் கருவிகள், புதிய நடைமுறைகள் குறித்து உரிய பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு தெரவித்துள்ளது.

சென்னை இயக்குநகரத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் ஏற்கெனவே பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நலத்திட்டங்கள், உள்கட்டமைப்புத் திட்டமிடல், வள ஒதுக்கீடு ஆகியவற்றில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“மாநிலத்தின் மக்கள்தொகை, வீட்டுவசதி விவரங்களைத் துல்லியமாக எடுத்துரைக்கும் வகையில் திறமையான தொழில்நுட்பம் சார்ந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்வதே தமிழகத்தின் நோக்கம். இதற்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன,” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்