தமிழக ரயில்வே திட்டங்கள் முடக்கம்: சு.வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு

2 mins read
5f3710b7-4e7e-4776-a458-49718de79152
சு.வெங்கடேசன் - படம்: ஊடகம்

மதுரை: தமிழகத்தின் அடிப்படை வளர்ச்சியோடு சம்பந்தப்பட்ட ரயில்வே திட்டங்கள் முடக்கப்படுவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் துரோக நடவடிக்கைகளுக்கு எதிராக, தொடர்ந்து போராட இருப்பதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முடக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறாமல், தெற்கு ரயில்வே பிரச்சினையை மூடி மறைக்கவே முயற்சி செய்வதாக தமது அறிக்கையில் வெங்கடேசன் சாடியுள்ளார்.

“தமிழகத்தில் ரயில் வளர்ச்சி திட்டங்கள் முடக்கப்பட்டது குறித்து, தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர், ரயில்வே வாரியத்துக்கு எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் சில கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதற்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கம் திட்டங்கள் குறித்த பொதுவான கொள்கையாகும். நான் எழுப்பியது பொதுமேலாளருடைய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்ட விபரங்கள் சார்ந்தது.

“முடக்கப்பட்ட புதிய பாதை ரயில் திட்டங்கள், நிதிநிலை அறிக்கையில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டு இப்பொழுது மீண்டும் சர்வேக்கு மாற்றப்பட்டுள்ள மூன்று இரட்டை பாதை திட்டங்கள் குறித்த விபரங்கள் ஆகும். தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர், ரயில்வே வாரியத்துக்கு எழுதிய கடிதத்தில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து நான் கேள்வி எழுப்பி இருந்தேன். ஆனால், தெற்கு ரயில்வே அதற்கு பதில் சொல்லாமல் திட்டங்கள் குறித்த பொதுவான கொள்கைகளை அறிவித்துள்ளது,” என்று வெங்கடேசன் சுட்டிக்காட்டி உள்ளார்.

தாம் கூறியது தவறு, திட்டங்கள் முடக்கப்படவில்லை என்று பதில் கூறியிருந்தால் தாம் அதை வரவேற்றிருக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு இல்லாமல் பொதுவான திட்டங்கள் குறித்த கொள்கையை அறிவித்திருப்பதை ஏற்க இயலாது எனக் கூறியுள்ளார்.

இதன் மூலம் தெற்கு ரயில்வே நிர்வாகம், பிரச்சினையை மூடி மறைக்கவே முயல்கிறது என்று வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் 47.8% புதிய அகல ரயில் பாதை திட்டங்கள் முடக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது உண்மைதானா என்பதை அமைச்சர் தெளிவுபடுத்துவாரா என்றும் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்

குறிப்புச் சொற்கள்