கேழ்வரகு உற்பத்தித் திறனில் தமிழகத்துக்கு முதலிடம்

கேழ்வரகு உற்பத்தித் திறனில் தமிழகத்துக்கு முதலிடம்

படம்: தினமலர்

18 Feb 2026 - 5:21 pm

1 mins read

சென்னை: கேழ்வரகு உற்பத்தித் திறனில் தமிழகம் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வேளாண் வரவு, செலவுத் திட்ட அறிக்கையில், ஊட்டச்சத்து மிகுந்த தானியங்களின் உற்பத்தியையும் பயன்பாட்டையும் அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் கடந்த 2023-2024 ஆண்டு முதல் ஐந்தாண்டுத் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஏறக்குறைய 12.84 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளதாகவும் இதற்காக ரூ.178 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும் திரு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மேலும், 90 சிறுதானிய மதிப்பு கூட்டுதல் மையங்கள் நிறுவியது, 20 லட்சம் ஏக்கரில் சிறுதானியப் பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்திய அளவில் தமிழகம் கேழ்வரகு உற்பத்தித் திறனில் முதலிடத்தைப் பெற்றுள்ளது என்று அமைச்சர் பெருமையுடன் தெரிவித்தார்.

கேழ்வரகு உற்பத்தியில் இரண்டாம் இடம், சிறுதானிய உற்பத்தியில் ஐந்தாம் இடத்தில் தமிழகம் சாதனை படைத்துள்ளதாகவும் கம்பு சாகுபடி 1.18 லட்சம் ஏக்கரில் இருந்து 1.33 லட்சம் ஏக்கர் ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பயறு பெருக்குத் திட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 24 லட்சம் ஏக்கர் பரப்பில் 9.44 லட்சம்‌ விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதற்கு ரூ.175 கோடி நிதி ஒதுக்கப்பட்டது என்றும் அமைச்சர் பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்