அந்நிய முதலீட்டில் தமிழ்நாடு முதலிடம்

அந்நிய முதலீட்டில் தமிழ்நாடு முதலிடம்

கோப்புப் படம்.

27 Sep 2026 - 4:18 pm

2 mins read

இந்தியாவில் முதலீடு செய்த நாடுகளில் சிங்கப்பூர் முதலிடம்; மொரிஷியஸ் இரண்டாமிடம்; அமெரிக்கா மூன்றாமிடத்தில் உள்ளன.

சென்னை: இந்தியாவில் பெறப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவிற்கு ஏறக்குறைய 19,817 மில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளது. இது இந்திய ரூபாயில் 1,86,661 கோடி ரூபாய் ஆகும்.

இதில் ஏப்ரல் மாதத்தில் 1,13,283 கோடி ரூபாயும் மே மாதத்தில் 26,697 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் 46,680 கோடி ரூபாய் முதலீடு இந்தியாவிற்கு வந்துள்ளது.

2000ஆம் ஆண்டு முதல் 26 ஆண்டுகளில் இந்தியா ஈர்த்துள்ள மொத்த அந்நிய நேரடி முதலீடு சுமார் 1.2 டிரில்லியன் டாலர் ஆகும்.

இக்காலகட்டத்தில் தமிழ்நாடு 5,953 மில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்து இந்தியாவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இது இந்திய ரூபாயில் சுமார் 55,900 கோடி ரூபாய் ஆகும்.

இப்பட்டியலில் மகாராஷ்டிரா 4,220 மில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்தையும் டெல்லி 2,671 மில்லியன் டாலருடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

கடந்த 2024-25ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 3,681 மில்லியன் டாலராக இருந்தது. இது 2025-26ஆம் நிதியாண்டில் 4,724 மில்லியன் டாலராக அதிகரித்தது.

அக்டோபர் 2019 முதல் ஜூன் 2026 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு 25,296 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது. இது நாட்டின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டுப் பங்கில் 7 விழுக்காடு ஆகும்.

இந்தியாவிற்கு அதிக அளவில் பங்கு மூலதன முதலீடு செய்த நாடுகளில் சிங்கப்பூர் 5,224 மில்லியன் டாலருடன் முதலிடத்தில் உள்ளது.

மொரிஷியஸ் 2,319 மில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்திலும் அமெரிக்கா 1,349 மில்லியன் டாலருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

சேவைத்துறை, கணினி மென்பொருள், வர்த்தகம், வாகன உற்பத்தி ஆகியவை நாட்டில் அதிக அளவில் அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளன.

இது குறித்துத் தவெக தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவின் முதலீட்டு வரைபடத்தில் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தன் இடத்தை வலுப்படுத்தும்,” என்று தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுமுதலீடுமுதலிடம்மகாராஷ்டிராசிங்கப்பூர்