சென்னை: வளர்ச்சித் திட்டங்களுக்காக கடன் வாங்கும் அளவைக் கணிசமாகக் குறைத்து தமிழக அரசு நிதி மேலாண்மையில் கவனம் செலுத்துவதாகத் தமிழக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல் - செப்டம்பர் 2026), மாநிலத்தின் கடன் வாங்கும் விகிதம் 21 விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.51,300 கோடியாக இருந்த கடன் அளவு, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.40,500 கோடியாகச் சரிந்துள்ளது.
முந்தைய ஆண்டுகளில் இந்தியாவில் அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது மிகவும் எச்சரிக்கையுடனும் திட்டமிட்டும் அரசு நிதியைக் கையாண்டு வருவதால், கடன் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்குப் பின்வாங்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கடன் வாங்குவதில் தமிழ்நாட்டைவிட முன்னிலையில் உள்ளன.
வளர்ச்சித் திட்டப் பணிகளை முடக்காமல், அதேவேளையில் நிதிப் பொறுப்புணர்வோடு கடன் அளவைக் கட்டுப்படுத்தி இருப்பது மாநிலப் பொருளியல் நலனுக்கான நற்சான்றாகப் பார்க்கப்படுகிறது.
