தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்நாடு: உயர்கல்வி நிலையங்களில் வெளியாள்கள் நுழைய கட்டுப்பாடு

2 mins read
12b3ec86-5ddc-41fb-a349-0cad1c2598fc
கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயிலும் மாணவ மாணவியரின் பாதுகாப்பு தொடர்பில் உயர்கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள அரசுக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வெளியாள்கள் வந்துசெல்வது தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயிலும் மாணவ மாணவியரின் பாதுகாப்பு தொடர்பில் உயர்கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கல்லூரிக் கல்வி ஆணையர், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், பாதுகாப்புக் குழுக்களில் இருப்போர் உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர்.

அப்போது, கல்லூரி வளாகத்தில் மாணவியர் உள்ளிட்ட பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்றும் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உள்ள நிர்வாகக் குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றை உடனே சரிசெய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பாதுகாப்பில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால், அதனை ஏற்கவே கூடாது என்றும் அதற்குக் காரணமானவர்கள் யாராக இருப்பினும் அவர்களை வளாகத்தினுள் மீண்டும் அனுமதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

அனைத்துக் கல்லூரிகளிலும் உள்விவகாரக் குழு அமைக்கப்பட வேண்டும், தேவையான அனைத்துத் தரவுகளையும் பெறுவதற்கான கட்டமைப்பு முறையை வலுப்படுத்த வேண்டும், உயர்கல்வி நிலையங்களில் மூன்றாம் தரப்பினரைக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

அத்துடன், உயர்கல்வி நிலைய வளாகங்களுக்குள் வந்துசெல்லும் வாகனங்கள், வெளியாள்களைப் பற்றிய தகவல்கள் நாள்தோறும் பதிவுசெய்ய வேண்டும் என்றும் பராமரிப்பு, ஒப்பந்தப் பணியாளர்கள் வந்துசெல்வதைக் கண்காணிக்க ‘பயோமெட்ரிக்’ அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மாணவ மாணவியர், பணியாளர்கள் தவிர்த்து மற்ற எவரையும் கல்வி நிலைய வளாகங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எஃப்ஐஆர் கசிவிற்குக் காரணம் தெரிந்தது

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) கசிந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

‘ஐபிசி’யில் (IPC) இருந்து பிஎன்எஸ் (BNS) குற்றவியல் சட்டத்திற்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றால் எஃப்ஐஆர் கசிந்துவிட்டது என்று தேசிய தகவல் மையம் (NIC) தமிழக அரசிடம் தெரிவித்துள்ளது.

மேலும், எஃப்ஐஆர் கசிந்தது தொடர்பிலான அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் ஆராயுமாறு மாநில குற்றப்பதிவுப் பணியகம் (SCRB) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்