சென்னை: தமிழகத்தில் லஞ்சம் பெறுவதில் வருவாய்த் துறை முதல் இடத்திலும் மின்வாரியத் துறை அடுத்த இடத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் புகார்களின் பேரில், தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். பலர் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைவாசம் அனுபவிப்பதாகச் செய்திகள் வெளியானபோதும், லஞ்சம் பெறுவது குறைந்தபாடில்லை.
இந்நிலையில், எந்த அரசுத் துறையில் லஞ்சம் கொடுப்பது அதிகமாக உள்ளது, எத்தனை பேர் லஞ்சப் புகாளில் சிக்கியுள்ளனர் என்பது தொடர்பாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரின் புள்ளி விவரப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வருவாய்த் துறையில் ஆக அதிகமானோர் லஞ்சம் பெற்று கைதாகி உள்ளனர்.
தமிழகத்தில் 2021 முதல் 2025 மார்ச் வரை, நில அளவை (சர்வே) துறையில் 29 பேர் உட்பட தாசில்தார் முதல் கடைநிலை ஊழியர் வரை மொத்தம் 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்ததாக, மின்வாரியத்தில் மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கியதாக உதவி மின்பொறியாளர் உட்பட 41 பேர் சிக்கி உள்ளனர்.
உள்ளாட்சிப் பகுதிகளிலும் லஞ்சம் பெறுவது அதிகரித்துள்ளது. பல்வேறு அடிப்படைப் பணிகளை மேற்கொள்வதற்காக லஞ்சம் வாங்கியதாக உள்ளாட்சி ஊழியர்கள் 32 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
லஞ்சம் பெறும் பட்டியலில், நான்காவது இடத்தில் உள்ள பத்திரப்பதிவுத் துறையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சார்பதிவாளர், உதவியாளர் என 17 பேர் லஞ்சம் பெற்று கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்.
கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை, உணவு வழங்கல் துறை, அறநிலையத்துறை என இதர துறைகளிலும் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுகளின் பேரில், துறைக்குத் தலா இரண்டு பேர் கைதாகி உள்ளனர்.