சென்னை: காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் இந்த ஆண்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு 36வது முறையாக 100 மில்லியன் யூனிட்டுகளைக் கடந்து சாதனை படைத்தது தமிழ்நாடு.
இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாகத் தமிழ்நாடு அதிக காற்றாலை மின் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் காற்றாலை தொடர்பான மின் உற்பத்தியை இந்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. மேலும், பல்வேறு மானியங்களையும் வழங்கி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் 9,500 மெகா வாட் திறனில், காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து உள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலைப் பண்ணைகளில் ஒன்றான முப்பந்தல் காற்றாலைப் பண்ணை கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், இந்தாண்டு மே மாதம், காற்றாலைப் பருவகாலம் தொடங்கியதில் இருந்து, அவற்றில் தினமும் சராசரியாக 80 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைத்து வந்தது. தற்போது மின் உற்பத்தி புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டில் மட்டும் 36வது முறையாக அன்றாட மின் உற்பத்தி 100 மில்லியன் யூனிட்டைக் கடந்து, கடந்த 2025ஆம் ஆண்டில் எட்டப்பட்ட 35 முறை என்ற சாதனையை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மின்வாரியம் மொத்தமாக 8,491 கோடி மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரத்தைப் பெற்றுள்ளது.
ஜூலை மாதம் மட்டும் 3,291 மில்லியன் யூனிட் மின்சாரத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் நாள்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுவதால், காற்றாலை மின் உற்பத்தி மிக அதிக அளவை எட்டும் என அரசு அதிகாரிகள் கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


