சென்னை: இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் 4,430 போலித் தொலைபேசி எண்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அத்தகைய போலி எண்களிலிருந்து வரும் அழைப்புகளைத் தடுக்க தொலைத்தொடர்புத் துறையுடன் இணைந்து செயல்படுவோம் என்று தமிழகக் காவல்துறையின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் தொடர்பில், தமிழகக் காவல்துறையின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் இயக்குநர் சந்தீப் மிட்டல், தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரிகளுடன் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
ஜியோ, பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடஃபோன் போன்ற தொலைத்தொடர்புச் சேவை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, இணையவழிக் குற்றங்களைத் தடுக்க ‘சிஐஓஆர்’ எனும் மையப்படுத்தப்பட்ட சேவையைத் தமிழகக் காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்துக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “போலித் தொலைபேசி அழைப்புகள் மூலம் இணையம் வழியாக அதிகமான குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழகக் காவல்துறை சார்பில் ‘சிஐஓஆர்’ என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிக் குறிப்பிட்ட திரு சந்தீப் மிட்டல், “இந்திய தொலைத்தொடர்புப் பயனாளர்கள் மோசடி வெளிநாட்டு அழைப்புகளில் இருந்து ‘சிஐஓஆர்’ பாதுகாக்கிறது. குறிப்பாக, இந்திய எண்களிலிருந்து வரும் போலியான அழைப்புகளை அது கண்டறிகிறது. போலி அழைப்புகள் பயனாளர்களை அடைவதற்குமுன் அவற்றைத் தடுத்து நிறுத்துவதே இச்சேவையின் முக்கிய நோக்கம்,” என்றார் அவர்.
அத்துடன், கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை, இணையவழிக் குற்றங்களைச் செய்யப் பயன்படுத்தப்படும் 4,430 போலித் தொலைபேசி எண்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ‘சிஓஐஆர்’ சேவையைப் பயன்படுத்தி, வாட்ஸ்அப், ஸ்கைப் போன்ற தளங்கள் வழியாக வரும் மோசடி அழைப்புகளைத் தடுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.