சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலை ஒன்று நெதர்லாந்து நாட்டில் ஏலம் விடப்பட இருந்த நிலையில், அம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறையின் சிலைத் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட துரித நடவடிக்கையால், கண்ணப்ப நாயனார் சிலை ஏலம் விடப்பட இருந்தது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
நாகை மாவட்டம் திருப்புகழூரில் அமைந்துள்ளது அக்னீஸ்வரர் கோவில். இங்கிருந்த கண்ணப்ப நாயனார் சிலை 15 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மாயமானது.
இந்நிலையில், உலோகத்தினாலான அந்தச் சிலை, நெதர்லாந்து நாட்டில் இருப்பதாகவும் அங்கு விரைவில் ஏலம் விடப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் உடனடியாக நெதர்லாந்து காவல்துறை, இந்திய தொல்லியல் துறை எனப் பல்வேறு தரப்பினருக்கும் அடுத்தடுத்து மின்னஞ்சல்களை அனுப்பினர்.
இதன் பலனாக, சிலை ஏலம் விடப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கண்ணப்ப நாயனார் சிலை நெதர்லாந்து வெளியுறவு அமைச்சின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் விரைவில் இந்தியா கொண்டு வரப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கான, சட்டப்பூர்வ ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், சிலைத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தமிழகக் காவல்துறைத் தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.