தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்பில் மகேஸ்: தமிழ்நாட்டு வரிப் பணம் உ.பி. மேம்பாட்டுக்குக் கொடுக்கப்படுகிறது

2 mins read
9320ddf7-49e2-47c9-be29-5cfa6fd97c13
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வரிப் பணத்தில் 71 விழுக்காட்டை எடுத்துக்கொண்டு 29 விழுக்காட்டு தொகையை மட்டுமே தமிழ்நாட்டு மேம்பாட்டுக்கு மத்திய அரசு கொடுக்கிறது. அதாவது ஒரு ரூபாய்க்கு 29 காசுதான் நமக்குத் திரும்ப வருகிறது என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடருக்கு ரூ.37 ஆயிரம் கோடி தேவை. ஆனால், தமிழ் நாட்டுக்குக் கொடுக்கப்பட்டதோ ரூ.200 கோடி மட்டுமே. இதுபோன்ற காரணங்களால் தமிழக அரசு பெரிய நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

எங்கள் மக்களின் உழைப்பைச் சுரண்டி மற்றவர்களுக்குக் கொடுப்பதை ஏற்க முடியாது. இதனை மக்கள் உணர்ந்ததால்தான், பாஜக கூட்டணியால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.

நாட்டில் வரி வருவாய் மூலம் மத்திய அரசுக்கு அதிகமான வரி வருவாய் கொடுக்கும் இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. இருந்தும் இங்கிருந்து பெறப்படும் பணத்தையெல்லாம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு செலவு செய்து வருகிறது.

மத்திய அரசால் தமிழகப் பிள்ளைகளின் கல்வி பாதிப்பு

மத்திய அரசின் பிடிவாதத்தால் ஆயிரக்கணக்கான தமிழகக் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசுக்கு கொடுக்கவேண்டிய ரூ.2,151 கோடியைத் தருமாறு முதல்வர், நான் மற்றும் அதிகாரிகள் என மூன்று கட்டமாக வலியுறுத்தியும், மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை. மத்திய அரசின் வீண் பிடிவாதத்தால், 44 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

அதோடு, மொழி என்பது நமது மாநிலத்தைப் பொறுத்தவரை மிகவும் உணர்ச்சிக்குரிய ஒன்றாகும். எங்களது இருமொழிக் கொள்கையை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடம் இருந்து நிதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.

‘மத்திய அரசு மிரட்டல்’

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அதேசமயம், இதில் கையெழுத்துப் போட்டால்தான் நிதி தருவேன் என்று மத்திய அரசு மிரட்டல் விடுக்கிறது.

இதுவரை எந்த அரசும் இப்படிச் சொன்னதில்லை. ஒத்திசைவுக்கான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், மத்திய அரசு பெரியண்ணன் மனப்போக்கில் செயல்படும்போதுதான், கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என இன்னும் வேகமாக குரல் கொடுக்க வேண்டி வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்