சென்னை: தமிழ்நாடு நாளைப் போற்றிக் கொண்டாட வேண்டியது ஒவ்வொரு தமிழனின் இனமான கடமை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
50,000 ஆண்டுகள் பழைமையான உலகின் முதல் மொழி தமிழ் மொழி என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தொல்குடியான நம் தமிழ் இனத்தின் தாயான நிலப்பரப்பானது, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டுமல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது,” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாடு என்கிற நம் உயிரினும் மேலான நமது தாய்நிலம், இந்திய மத்திய அரசால் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக போற்றிக் கொண்டாடுகிறோம்,” என சீமான் கூறியுள்ளார்.
“மூவேந்தர்களின் இலச்சினைகள் பொறித்த தமிழ்நாட்டுக் கொடியை திருக்கொடிகளாக அச்சிட்டுக் கொடுத்து, இனிப்புகள் வழங்கி, எல்லை மீட்புப் போராளிகளுக்கு மலர் வணக்கம் செலுத்தி, பேரெழுச்சிமிக்க திருவிழாவாக தமிழ்நாடு நாளைக் கொண்டாடுவோம்,” என சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.