தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்

2 mins read
40c2c97a-c04d-48b3-a39c-8e0bfc5b75c5
சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வாயிலாக, தமிழகம் அதிக வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. - படம்: ஊடகம்

சென்னை: வேலைவாய்ப்புகளை அதிகமாக வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

தொழில் வளர்ச்சியிலும் பொருளாதாரத்திலும் பல ஆண்டுகளாக முன்னிலையில் இருந்து வரும் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைவிட சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வாயிலாக தமிழகம் அதிக வேலை வாய்ப்புகளை வழங்கி வருவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் 2023-24 வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அதிக அளவில் துவங்க ஊக்கம் அளிப்பதன் வாயிலாக, சாதாரண மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதாக அந்த வங்கி சுட்டிக்காட்டி உள்ளது.

தமிழகத்தில் 39,699 சிறு தொழில்கள் உள்ளதாகவும் அவை 4.81 லட்சம் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ரிசர்வ் வங்கி, இதன் மூலம் தமிழகம் 8.48 லட்சம் ‘மேன் டேஸ்’ எனப்படும் மனித உழைப்பு நாள்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, மகாராஷ்டிர மாநிலத்தில் 26,446 சிறு தொழில்களில் 6.45 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அம்மாநிலம், 7.29 லட்சம் மனித உழைப்பு நாள்களைக் கொண்டுள்ளது.

அதேபோல, குஜராத்தில் 31,031 தொழில்களில் 5.28 லட்சம் தொழிலாளிகள் உள்ளனர். இம்மாநிலம், 7.21 லட்சம் மனித உழைப்பு நாள்களைக் கொண்டுள்ளது.

“ஊழியர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்குதல், அதிக அளவில் உற்பத்தி செய்தல் ஆகியவற்றுக்கான மனித உழைப்பு நாள்களில் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் உள்ளது,” என ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

41% பெண் பணியாளர்கள்

இதற்கிடையே, இந்தியாவில் உள்ள மொத்த பெண் பணியாளர்களில் 41 விழுக்காட்டினர் தமிழகத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

மாநிலத்தில் அமைதி நிலவவும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதனால், தமிழகத்தில் பெண்கள் அதிகளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன் பலனாக நாட்டிலுள்ள மொத்த பெண் பணியாளர்களில் 41 விழுக்காட்டினர் தமிழகத்தில் உள்ளனர் என்றும் அமைதியான வளர்ச்சிக்கு உகந்த சூழலால், தமிழகத்தை நோக்கி புதிய தொழில் முதலீடுகள் வந்த வண்ணம் உள்ளன என்றும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு செயற்கை நுண்ணறிவு இயக்கத்தை துவங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகச் சட்டமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளன்று ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வெளிநடப்பு செய்தார்.

இதையடுத்து, அவரது உரையை சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு படித்தார்.

குறிப்புச் சொற்கள்