சென்னை: இணையக் குற்றங்கள் தொடர்பான புகார்கள்மீது நடவடிக்கை எடுப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார்.
தமிழகக் காவல்துறையின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட ‘ஹேக்கத்தான் 2024’ போட்டியில் பங்கேற்று, வெற்றிபெற்ற கல்லூரி மாணவர்களுக்கு புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) நடந்த நிகழ்ச்சியில் டிஜிபி சங்கர் ஜிவால் பரிசு வழங்கி வாழ்த்தினார்.
அப்போது பேசிய திரு ஜிவால், “இணையக் குற்றங்கள் தொடர்பில் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 99 விழுக்காட்டினர் தாங்களாகவே இணையக் குற்றவாளிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அவற்றைக் கொண்டுதான் குற்றவாளிகள் எளிதில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்,” என்று சொன்னார்.
இணையக் குற்றம் சார்ந்த புகார்களில் ‘சிஎஸ்ஆர்’ எனப்படும் அன்றாட நாட்குறிப்பு அறிக்கையும் முதல் தகவல் அறிக்கையும் (எஃப்ஐஆர்) பதிவுசெய்து நடவடிக்கை எடுப்பதில் நாட்டிலேயே தமிழகந்தான் முதலிடத்தில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
“இணையக் குற்ற உதவி அழைப்பு எண்ணான 1930க்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 750 அழைப்புகள் வருகின்றன. ஒட்டுமொத்தத்தில் அந்த எண்மூலம் 2024ஆம் ஆண்டில் மட்டும் 268,875 அழைப்புகள் வந்துள்ளன. தேசிய குற்றப் பதிவக இணையவாயில் வழியாக நாள்தோறும் சராசரியாக 450 வழக்குகள் பதிவாகியுள்ளன,” என்று திரு ஜிவால் விவரித்தார்.
மேலும், இணையவழி விளையாட்டு ஆணையத்தின் கோரிக்கையின் அடிப்படையில், ஐந்து சூதாட்ட இணையத்தளங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
கடந்தமுறை நடந்த ‘ஹேக்கத்தான்’ போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் வழங்கிய ஆலோசனைகளில் சிலவற்றைக் காவல்துறை எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.