ஆசிரியர் பற்றாக்குறையால் தத்தளிக்கும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள்

ஆசிரியர் பற்றாக்குறையால் தத்தளிக்கும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள்

2 mins read
0c032dec-da78-4a1e-b0af-22305ea673a4
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 92.9 விழுக்காட்டுப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. - படம்: தி இந்து

சென்னை: உயர்கல்வித் துறையில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டின் நற்பெயருக்கு ஆசிரியர் பற்றாக்குறையால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவித்துள்ளது.

மாநில உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்கள் கடுமையான ஆசிரியர் பணியிடப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

அந்தப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில், மூத்த கல்விசார் தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் ஏறக்குறைய அனைவருமே பணியிலிருந்து விலகியுள்ளனர்.

இதற்கிடையே, துணைவேந்தர்கள் இல்லாமலேயே 15 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் இயங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் ஆகப்பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகத்தில் 67.6 விழுக்காட்டு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அந்தப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் பணியில் 67.9 விழுக்காடும் இணைப் பேராசிரியர் நிலையில் 85 விழுக்காடும் பேராசிரியர் நிலையில் 43 விழுக்காடும் காலியிடங்கள் உள்ளன.

“இந்த ஆண்டில் மேலும் 11 ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற இருப்பதால் நிலைமை இன்னும் மோசமடையக்கூடும்,” என்று பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தற்போது பன்னிரண்டுக்கும் மேற்பட்ட துறைகள் பொறுப்பு ஆசிரியர்களின் மேற்பார்வையில் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

அங்கு அனுமதிக்கப்பட்ட 50 பேராசிரியர் பணியிடங்களில் இருவர் மட்டுமே பணியில் இருப்பதால், பேராசிரியர் நிலையில் 96 விழுக்காட்டுக் காலியிடங்கள் உள்ளன.

மேலும், 86.1 விழுக்காட்டு இணைப் பேராசிரியர் பணியிடங்களும் காலியாகவே உள்ளன.

“இவ்வாறு ஆகக் குறைவான தலைமைத்துவக் கட்டமைப்பைக் கல்வி நிலையங்கள் கொண்டுள்ள நிலையில், கல்விசார் மேற்பார்வை, முனைவர் பட்ட ஆய்வுகளுக்கான வழிகாட்டுதல், ஆராய்ச்சி நெறிப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகள் கிட்டத்தட்ட முடங்கிப்போயுள்ளன,” என்றார் அந்த அதிகாரி.

திருச்சியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் 92.9 விழுக்காட்டுப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.

அதேபோல, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 74.4 விழுக்காட்டு உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் 13 பல்கலைக்கழகங்களில் இளநிலை ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை மிக அதிகமாக உள்ள பல்கலைக்கழகமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திகழ்கிறது.

தமிழ்நாட்டின் முதன்மைத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒட்டுமொத்தமாக 34.1% பணியிடங்கள் காலியாக உள்ளன.

இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 67.5 விழுக்காடும் பேராசிரியர் பணியிடங்களில் 62.6 விழுக்காடும் காலியாக உள்ளன. ஏறத்தாழ 192 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.

“அண்ணா பல்கலைக்கழகத்தில் நீடிக்கும் பணியாளர் பற்றாக்குறை அதன் செயல்பாடுகளைப் பலவீனப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ. பாலகுருசாமி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்