சென்னை: தமிழகத்தில் இப்போது வடமாநிலங்களைச் சேர்ந்த ஒன்றரை கோடி பேர் குடியேறி உள்ளதாக பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன.
நாள்தோறும் அதிகாலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் வடமாநில ரயில்களில் இருந்து ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் இறங்குகிறார்கள்.
இப்போது தமிழகம் முழுவதும் நாற்று நடுதல், களையெடுத்தல் உள்ளிட்ட விவசாயம் முதல், மருத்துவமனைகள் வரை பலவிதமான வேலைகளிலும் அவர்களே இருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த விவகாரமும் பேசுபொருளாக இருக்கும் என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட சிலர்.
பத்து லட்சம் வடமாநிலத்தவர்கள்:
ஒரு தரப்பினர் கூறுவதுபோல் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகின்றனவா? இதே நிலைமை நீடித்தால் நாளை தமிழகத்தின் ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் அளவுக்கு வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிடுமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
2021ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பல்வேறு வேலைகளைச் செய்து வருவதாகக் கூறப்பட்டது. அந்த எண்ணி்க்கை தற்போது வெகுவாக அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
“வடமாநிலத்தவர் ஆதிக்கம் என்ற தொனியில் ‘தமிழர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கின்றனர்’, ‘குறைந்த கூலிக்கு வேலை செய்கிறார்கள்’ எனப் போகிறப்போக்கில் கற்பிதங்கள் விதைக்கப்படுகின்றன. இவை உண்மையல்ல.
தொடர்புடைய செய்திகள்
“ஏனெனில், கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட வானுயர்ந்த கட்டடங்கள், பிரம்மாண்ட பாலங்கள் அனைத்திலும் வடமாநிலத் தொழிலாளர்களின் ரத்தமும் வியர்வையும் நீக்கமறக் கலந்திருக்கின்றன. சிலரின் உயிரும் கலந்திருக்கிறது,” என்று ஆனந்த விகடன் ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
இக்கூற்றை எளிதில் புறக்கணித்துவிட இயலாது. ஏனெனில், இந்த வாதத்துக்கு வலுசேர்க்கும் விதமாக அக்கட்டுரையில் முன்வைத்துள்ள சில புள்ளி விவரங்களையும் கவனிக்க வேண்டியுள்ளது.
“2023-24 பொருளாதார ஆய்வின்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தமிழகம் 8.5% பங்களிக்கிறது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
“அதேபோல 2023ஆம் ஆண்டு இந்தியப் பொருளியல் கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy) தரவுகளின்படி, தமிழ்நாட்டில் வேலையின்மை விகிதம் 6.8% ஆகவே உள்ளது. இது வட இந்தியர்கள் வேலை செய்வதால் தமிழர்களுக்கு உருவான நிலை கிடையாது.
“ஏனெனில், ‘புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளூர் மக்கள் தவிர்க்கும் கடினமான, குறைந்த ஊதியப் பணிகளையே செய்கிறார்கள்’ என்கிறது தரவு.
“கல்வியில் வடமாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னேறியுள்ளதை இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கலாம்,” என அக்கட்டுரையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம்:
2021-22 தரவுகளின்படி உயர்கல்விச் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு 49% விழுக்காடு பெற்று முன்னணியில் உள்ளது. இது இந்தியத் தேசிய சராசரியைவிட அதிகம். ஆனால், பீகார் 14-15%, உத்தரப்பிரதேசம் 25-27% மட்டுமே கொண்டு மிகவும் பின்தங்கி உள்ளதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழகத்தில் கல்விக்கான அடித்தளம் மிக வலுவாக உள்ளது. எனவே, உயர்கல்வி மேற்கொள்வோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் கடின உடலுழைப்பு தேவைப்படும் தொழில்களில் இளையர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும்போது, இயல்பாகவே வேலை வாய்ப்பு தருவோரின் பார்வை வேறு இடங்களில் பதியும்.
வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களோ, சம்பளம் குறைத்துத்தான் கேட்கிறார்கள். ரேஷன் அரிசியில் உணவை தயாரித்துக்கொள்கிறார்கள். இதனால் வேலை தருவோர் வடமாநிலத் தொழிலாளர்களையே வேலைக்கு வைக்கிறார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களோ மதுப்பழக்கம், போதைப்பழக்கம் ஆகியவற்றால் வீணாகிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. கிட்டத்தட்ட 30,000 சிறிய, பெரிய தொழிற்சாலைகளைத் தமிழகத்தில் காண முடியும்.
எனவே, இந்த எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு, அதாவது 3,000 தொழிற்சாலைகளை மட்டுமே கொண்டுள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு தேடி தமிழகம் வருவதில் வியப்பேதும் இல்லை.
குறைந்த ஊதியம், அதிக உழைப்பு:
உடல் உழைப்பு வேலைகளில் ஈடுபடும் வடமாநிலத்தவர்களுக்கு அதிகபட்சமாக, 10,000 முதல் 14,000 ரூபாய் மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் இதே பணிகளுக்கு நாள்தோறும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் தர வேண்டியுள்ளது.
தங்களுக்கு கிடைக்கும் குறைந்த ஊதியத்தில் உணவு, இருப்பிட, இதர செலவுகளை ஈடுகட்டுவதுடன் சொந்த ஊரில் உள்ள குடும்பத்துக்கும் பணம் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் புலம்பெயர்ந்த மக்கள்.
கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் தங்குவதற்கு வீடும் அடிப்படை சுகாதார வசதிகளும்கூட இல்லாமல், ‘ஆஸ்பெஸ்டாஸ்’ கூரையுடன் கூடிய சிறிய அறை போன்ற அமைப்பில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்க வேண்டிய அவலத்துக்கு வடமாநிலத்தவர்கள் ஆளாவது கண்கூடாய் தெரிந்ததே.
இன்று இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்துவதாகக் கூறும் தரப்பினர், வடமாநிலத்தவர்களும் மொழிப் பிரச்சினையால் தமிழகத்தில் திண்டாடுவதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதிக உழைப்பு, குறைந்த ஊதியம் என உழைப்புச் சுரண்டல், சமூகப் பாதுகாப்பின்மை, கேலி, கிண்டல்கள் என பலவிதமான உளவியல் ரீதியிலான சிக்கல்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’:
பல்வேறு வெளிநாடுகளுக்கு வேலை பார்க்கச் செல்லும் தமிழர்கள், உள்நாட்டிலும் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இடம்பெயர்கிறார்கள்.
சென்ற இடங்களில் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழக சமூகப் போராளிகள் குரல்கொடுக்கின்றனர். அதுபோன்ற பாதுகாப்பு, தமிழகத்துக்கு வரும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் அல்லவா. இதுதான் நடுநிலை வகிக்கும் சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
ஒருகாலத்தில், ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்பார்கள். இந்நிலை விரைவில் மாறக்கூடும்.
“மத்திய அரசியல் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ஏற்றபடி, ‘One Nation; One Ration’ திட்டத்தை அமலாக்குகிறது. அவரவர் குடும்ப அட்டை, அவரவர் மாநிலத்தில் இருக்கலாம். அதைக் காண்பித்து தமிழகத்தில் பொருள்கள் வாங்கிக்கொள்ளலாம்.
“இந்நிலையில், இந்தி மொழியைக் கட்டாயமாக்கவும் மத்திய அரசு தொடர் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
இதே நிலை நீடித்தால், ‘வடக்கு வாழ்கிறது, அதுவும் தெற்கில் அமர்ந்தபடி வாழ்கிறது’ என்ற நிலை ஏற்பட்டுவிடும்,” என்றும் தமிழ் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.