சென்னை: இந்தியாவில் வறட்சியால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது என்று காலநிலை ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
அனைத்துலகக் காலநிலைச் சஞ்சிகையில் வெளியாகியுள்ள அந்த ஆய்வறிக்கை, 1971 முதல் 2022 வரையிலான அன்றாட மழைப்பொழிவு, வெப்பநிலைத் தரவுகளை விரிவாக ஆராய்ந்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய இடைத்தர வரம்பு வானிலை முன்னறிவிப்பு மையம், பெங்களூர் ஏட்ரியா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள் இணைந்து அந்த ஆய்வை மேற்கொண்டனர். வறட்சி, வெப்ப அலை, பெருமழை உள்ளிட்ட முக்கியக் காரணிகளைக் கொண்டு திருத்தியமைக்கப்பட்ட இந்தியக் காலநிலை உச்சநிலைக் குறியீட்டை அவர்கள் உருவாக்கினர்.
மழைப்பொழிவையும் வளிமணடல நீர்த்தேவையையும் கணக்கில் கொள்ளும் ‘செபி’ (SEPI) எனப்படும் தரப்படுத்தப்பட்ட மழைப்பொழிவு, ஆவியாதல் குறியீட்டைப் பயன்படுத்தி அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்மூலம், 2000வது ஆண்டிற்குப் பிறகு தென்னிந்தியாவில் வறட்சிக்குள்ளாகும் பரப்பளவு கணிசமாகக் கூடியுள்ளதை அவர்கள் கண்டறிந்தனர்.
குறிப்பாக, 2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டுகளில் தென்னிந்தியா, மத்திய இந்தியா, வடகிழக்கு இந்தியாவின் பெரும்பகுதிகளில் 20 விழுக்காட்டிற்குமேல் வறட்சி பதிவாகியுள்ளது.
தென்னிந்தியாவில் வறட்சியின் தாக்கம் மிகத் தெளிவாகத் தெரிகிறது என்றும் நாட்டின் கிழக்குக் கடற்கரையில் தமிழ்நாடு ஒரு முக்கியமான வறட்சி மண்டலமாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றும் புவி அறிவியல் அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஆய்வின் இணை ஆசிரியருமான எம்.ராஜீவன் தெரிவித்தார்.
கடந்த 50 ஆண்டுகளில் தென்னிந்தியாவில் பிற இயற்கைப் பேரிடர்களைவிட வறட்சி தீவிரமடைந்துள்ளதாக முதன்மை ஆய்வாளர் தோட்டா மோகன் கூறியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை பொய்க்கும்போது தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி ஏற்படுகிறது. 2016ஆம் ஆண்டு அக்டோபர்-டிசம்பர் காலகட்டத்தில் 440 மில்லிமீட்டர் என்ற வழக்கமான அளவைவிட 62 விழுக்காடு குறைவாக, அதாவது 168.3 மில்லிமீட்டர் மழை மட்டுமே பெய்தது. அதனால் ஏற்பட்ட வறட்சியால் மொத்தமுள்ள 16,682 வருவாய்ச் சிற்றூர்களில் 13,305 ஊர்கள் பாதிக்கப்பட்டன. அதனையடுத்து, மாநிலத்தின் 32 மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
இதனிடையே, தமிழக அரசின் எல் நினோ ஆயத்தநிலை மதிப்பீட்டு அறிக்கையிலும் நீர்ப் பற்றாக்குறை, அணைகளுக்கான நீர்வரத்துக் குறைவு போன்ற ஆபத்துகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதனால், நீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், குறுகியகால, வெப்பத்தைத் தாங்கி வளரும் பயிர்வகைகளை ஊக்குவிக்க வேண்டுமென எல் நினோ ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
