தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாதுகாப்புத் தொழில்துறையின் மையமாக தமிழகம்: ஸ்டாலின் நம்பிக்கை

2 mins read
7c0ad6d7-080d-4d0e-b001-870aa868e177
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: இந்திய விண்வெளித் துறை வளர்ச்சிக்கு தமிழகம் உறுதுணையாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெறும் விண்வெளி பாதுகாப்புத் துறைசார் தொழில்களுக்கான கண்காட்சிக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், உலக அளவில் வேகமாக வளரும் பொருளியல் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

“இந்தியாவை ஈர்க்கும் மாநிலம் என்ற நிலையில் இருந்து உலகை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. தமிழக தொழில்துறை மாநாடுகள் உலக அளவில் பேசப்படுகின்றன. வளர்ந்து வரும் அனைத்து தொழில்களிலும் தமிழ்நாடு கால்பதித்து வருகிறது,” என்றார் திரு ஸ்டாலின்.

தமிழகத்தில் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உற்பத்தித் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவாகி வருகிறது என்றார். மேலும், அனைத்துத் தொழில்களிலும் தமிழகம் தடம் பதித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

“தற்போது தொடங்கி வைத்தது வெறும் கண்காட்சி மட்டுமல்ல. முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்களைக் கண்டறியும் தளம். இரட்டை இலக்கப் பொருளியல் வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது,” என்றார் ஸ்டாலின்.

இந்திய விண்வெளித் துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என்றும் பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடம் எதிர்காலத்தில் முக்கியப் பங்காற்ற உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பாதுகாப்புத் துறையில் முக்கியமான மையமாக தமிழ்நாடு மாறும் என நம்புகிறேன். இந்தத் துறையில் 23,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

“சென்னை அருகே மேற்கொள்ளப்பட்ட ‘ஏரோஹப்’ (AEROHUB) திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. மொத்தத்தில் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் முதலீடுகளுக்கு உகந்தவையாகத் திகழ்கின்றன,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்