சென்னை: கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படும்போது தமிழகம் அமைதியாக இருக்காது என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை அமைப்பதில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புது விதிமுறைகளை அறிவித்திருப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கல்வி என்பது நமது அரசியலமைப்பில் ஒருங்கிணைந்த பட்டியலில் இருக்கும் பிரிவு என்றும் யுஜிசியின் இந்த நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலும் கல்வித்துறையைச் சாராதவர்களைத் துணை வேந்தர்களாக நியமிக்கும் வகையிலும் யுஜிசி கொண்டு வந்துள்ள விதிமுறைகள், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி மீதான நேரடி தாக்குதல்.
“கல்வியானது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளின் கைகளில் மட்டுமே இருக்க வேண்டுமே அன்றி, பாஜக அரசின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் ஆளுநரின் கட்டளைக்கு ஏற்ப இருக்கக்கூடாது,” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது அதிகாரங்களை ஒரே இடத்தில் குவிக்கவும் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரங்களைக் குறைக்கவும் வழிவகுக்கும் என்று அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த அத்துமீறலை ஏற்க முடியாது. சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தமிழகம் போராடும்,” என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் கூறியுள்ளார்.