சென்னை: கடல்சார் பாதுகாப்பின் ஒரு மைல்கல்லாக, தமிழ்நாட்டில் இந்தப் பருவத்தில் மட்டும் சாதனை அளவாக 229,432 ‘ஆலிவ் ரிட்லி’ ஆமைக்குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டுள்ளன.
ஐந்து ஆண்டுகளில் இது கிட்டத்தட்ட நான்கு மடங்கு வளர்ச்சி எனக் கூறப்பட்டது. கடந்த 2019-2020ஆம் ஆண்டில் 25,551 ஆமைக்குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டன.
“தொடர்ச்சியான இந்த வளர்ச்சி, வெற்றிகரமான ஆமை மேலாண்மையையும் மேம்பட்டுள்ள கடலோரப் பாதுகாப்பையும் வெளிப்படுத்துகிறது. பலதரப்பினரும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட பாதுகாப்பு முயற்சிகளால் இது நடந்துள்ளது,” என்று மாநிலச் சுற்றுச்சூழல், பருவநிலை, வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு கூறினார்.
2024-25 பருவத்தைப் பொறுத்தமட்டில், இம்மாதம் 6ஆம் தேதிவரை 249,745 ஆமைக்குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டுள்ளன. அனைத்துக் கடலோர மாவட்டங்களிலிருந்தும் திரட்டப்பட்ட தரவுகளிலிருந்து இது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, கடலூரிலும் சென்னையிலும் ஆமைகள் அடைகாத்து, குஞ்சுபொரிப்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இம்மாத இறுதிவரை ஆமைகள் குஞ்சு பொரிப்பது தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடல் ஆமைகளைப் பாதுகாப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த மாநிலமாகத் திகழ்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் திருவாட்டி சுப்ரியா கூறினார்.

