பொள்ளாச்சி: தமிழ் நாட்டின் கிணத்துக்கடவில் வசிக்கும் பெண்ணுக்குச் செல்ல வேண்டிய தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கில் இரண்டு ஆண்டுகளாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் 50 வயது மகேஸ்வரி. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தார். ஆனால், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான எவ்விதக் குறுஞ்செய்தியும் வரவில்லை. அதனால், அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கருதியுள்ளார்.
இந்த நிலையில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் ஜூலை 25ஆம் தேதி நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மீண்டும் மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்துள்ளார்.
மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள், “உங்களுக்கு இரண்டு ஆண்டுகளாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. வங்கிக் கணக்கைச் சரிபாருங்கள்,” எனக் கூறினர்.
இதையடுத்து, கிணத்துக்கடவு பரோடா வங்கியில் மகேஸ்வரி விசாரித்தார். ஆய்வு செய்த வங்கி ஊழியர்கள், மகேஸ்வரியின் ஆதார் எண்ணுடன் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாந்திதேவி என்பவரது வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது வங்கிக் கணக்குக்கு மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் செல்வதாகவும் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, பொள்ளாச்சி துணை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதனையடுத்து மகேஸ்வரியின் வங்கிக் கணக்குக்கு உரிமைத் தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு 2023ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்) செயல்படுத்தி வருகிறது. இதுவரை 1.15 கோடி பெண்கள் இந்தத் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 பெறுகின்றனர். இந்தத் தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.