தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிப்பா? இபிஎஸ் கண்டனமும் அரசின் விளக்கமும்

2 mins read
fb3c3175-b29c-420a-9e8d-5f54fd930ccf
2024ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தமிழக அரசின் அலங்கார ஊர்தி, பெண் சக்தியைப் பிரதிபலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டு உள்ளது என்றும் அதற்கு திமுக அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் இது வதந்தி என நிராகரித்துள்ளது. வதந்திகளை நம்பவேண்டாம் என்று குறிப்பிட்டு அது தொடர்பாக விளக்கமும் அளித்துள்ளது.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “குடியரசு தின விழாவில், தலைநகர் புதுடெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் அணிவகுப்பில், தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை உயர்த்திக் காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அதிமுக ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு, ஆனால் திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக்கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன். ஸ்டாலின் அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும், அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகத்தின் எக்ஸ் பக்கத்தில், “குடியரசு தினம்: தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்று வதந்தி பரவுகிறது. இது முற்றிலும் தவறான தகவல்.

“2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது. புதுடெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும். ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அது அனுமதிக்கப்படுகிறது.

“அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. 2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்து 2026 அணிவகுப்பில்தான் பங்கேற்க இயலும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகின்றன,” என்று விளக்கமளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்