தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதுதான் தமிழக அரசின் முதன்மை நோக்கமாக இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனும் கூறியுள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரையில், தமிழகம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதில் துறைசார்ந்த நிபுணர்களுக்கு எந்தவித மாறுபட்ட கருத்தும் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், மற்ற மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் மிக வேகமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா, திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதுதான் முக்கியம் என்கிறார்கள் நிபுணர்கள். அதைப் பற்றி அலசுகிறது இக்கட்டுரை.
புவிசார் அரசியல் மாற்றம் காரணமாக ஐடி துறையில் தமிழ்நாட்டிற்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் ஐடி துறை முதலீடுகளை ஈர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அண்மையில் பட்டியலிட்டார்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று மதுரை. தமிழகத்தின் பழம்பெரும் நகரமாக உள்ள மதுரையை ஐடி துறையின் மையமாக உருவாக்கத் தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
இதற்காக அங்கு இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் ‘கனெக்ட் மதுரை 2024’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் 2025ஆம் ஆண்டுக்கான மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்களும் 10,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர்.
சமமான பொதுக் கொள்கைகள் மற்றும் நிர்வாகம் (Equitable Public Policy And Governance), காலநிலை தாக்கம் மற்றும் நிலைத்தன்மை (Climate Impact And Sustainability), பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழிலாளர் உருமாற்றம் (Economic Growth And Work Force Transformation) போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்த விவாதங்கள் இம்மாநாட்டில் இடம்பெற்றன.
தொடர்புடைய செய்திகள்
தொழில்களுக்கான உகந்த சூழல்:
தமிழகத்தில் தொழில்களுக்கான உகந்த சூழலை ஏற்படுத்துவது அடுத்த நடவடிக்கையாக முக்கியமாகக் கருதப்படுகிறது.
பொழுதுபோக்கு மையங்கள், ஊழியர்கள் ஓய்வெடுக்கும் இடங்களைக் கொண்ட தொழில்நுட்பப் பூங்காக்களை உருவாக்க வேண்டும். தொழில்துறையினர் எளிதில் புதிய தொழிலைத் தொடங்க ஒற்றைச் சாளர அமைப்பைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எந்தவொரு சிக்கலும் இல்லாமல் தொழில்கள் தொடங்கப்படுவதை உறுதி செய்யும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப நகரம்:
சென்னையில் ஒரு தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை புறநகரான மாதவரத்தில் 150 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நகரத்தில் அலுவலக வசதி, குடியிருப்பு வசதி, வணிக வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்திருக்கும்.
மேலும், அதிநவீன வசதிகள் கொண்ட தரவு மையமும் இங்கு அமையும்.
அதிநவீன கணினி வசதி, தரவுகளைச் சேமிக்கும் வசதி, பல்நிலை தரவு பாதுகாப்பு, பேரிடர் காலத்தில் தரவுகளைப் பாதுகாத்தல், அதிவேக இணைய வசதி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக இந்நகரம் இருக்கும்.
தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்:
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை நிறுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில், கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூங்கா 158 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 3,500 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளது.
பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த பல்வேறு அனைத்துலக சேவை நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தமிழ்நாடு விருப்பத் தேர்வாக உருவாகியுள்ளது என்றும் அத்தகைய தேவைகளை ஈடுகட்ட ஏதுவாக புதிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு கூறுகிறது.
மேலும், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (ELCOSEZ) உருவாக்குதல், கிராமம் மற்றும் நகர மக்களிடையே தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் உள்ள இடைவெளியை நிரப்புதல், தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்ப மின் ஆளுமையில் சிறந்த மாநிலமாக மாற்றுதல், தமிழ்நாட்டின் செயலி ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அரசு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதிபடுத்தப்படும் பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சி:
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் நகரங்களான திருச்சி, மதுரை, சேலம் மற்றும் தொழில் நிறுவனங்கள் இல்லாத, கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் சிறிய அளவிலான தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்ட ஐடி பூங்காவும் தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் நியோ பூங்காக்களும் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* விருதுநகரில் ரூ.1,683 கோடியில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான ஒருங்கிணைந்த ஜவுளி, தகவல் பூங்கா அமைக்கப்படுகிறது. இதன் மூலம் இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* கோவை விளாங்குறிச்சியில் ரூ.1,100 கோடி மதிப்பில் 20 லட்சம் சதுர அடியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படுகிறது. இதன் மூலம் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
* மதுரையில் ரூ.350 கோடியில் 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் ஐடி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* திருச்சியில் ரூ.345 கோடியில் 6 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியில் ஐடி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* விழுப்புரம் தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த மூன்று ஆண்டு காலத்தில் தனியார் மற்றும் பொதுத் துறைகளில் 5.74 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாக தமிழக அரசு கூறுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் கூடுதலாக 75,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது.