திருச்சி: தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் முதலிடம் பிடித்துள்ளார். அதன்படி திருச்சி மாவட்டம், லால்குடியில் போட்டியிடும் லீமா ரோஸ் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 5,863 கோடி ரூபாய் என கணக்கு காட்டப்பட்டுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்டவராக, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
வேட்பாளர் விவரம்
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி எனப் பலமுனைப் போட்டி நிலவுகிறது.
இதில் அதிமுக கூட்டணியின் சார்பாக திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் லீமா ரோஸ் மார்ட்டின் போட்டியிடுகிறார்.
தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு
வேட்புமனுவில் அவர் தாக்கல் செய்துள்ள உறுதிமொழி ஆவணத்தின்படி,
லீமா ரோஸின் தனிப்பட்ட சொத்து ரூ.1,048 கோடி, அவரது கணவர் மார்ட்டின் சொத்து ரூ.4,159 கோடி, மகன் ஜோஸ் மார்டின் சொத்து மதிப்பு ரூ.665 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளர்களில் ஒருவராக லீமா ரோஸ் தற்போது உருவெடுத்துள்ளார்.
சர்ச்சைகளும் பின்னணியும்
லீமா ரோஸின் கணவர் மார்ட்டின், கடந்த காலங்களில் ‘தேர்தல் பத்திரங்கள்’ (Electoral Bonds) விவகாரத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளானவர்.
தொடர்புடைய செய்திகள்
இவர் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பத்திரம் மூலமாக மார்ட்டின் திமுகவுக்கு சுமார் ரூ.509 கோடியும், திரிணாமூல் காங்கிரசுக்கு ரூ.542 கோடியும், பாஜகவுக்கு ரூ.100 கோடியும் நன்கொடையாக வழங்கியிருந்தார்.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளரின் இத்தகைய பிரம்மாண்ட சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

