சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை மொழியாகத் தமிழ்: தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை மொழியாகத் தமிழ்: தீர்மானம் நிறைவேற்றம்

2 mins read
4505c421-0f4a-48f3-8ecd-e402be4a4b02
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள், ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் வாதங்களை முன்வைக்கவும் உரிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும் எனத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா
Google News Preferred Icon

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை மொழியாகத் தமிழை அங்கீகரிக்கக் கோரி, சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

வியாழக்கிழமை (செப்டம்பர் 3) சட்டமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அவர், உலகளவில் ஏறக்குறைய ஒன்பது கோடி மக்களால் பேசப்படும் தமிழ் மொழி, மக்களின் உணர்வோடு கலந்த ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் விளங்கி வருகிறது என்றார்.

ஏற்கெனவே மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக நடைமுறையில் இருக்கும் நிலையில், மாநிலத்தின் உயர் நீதிமன்றத்திலும் தமிழை முதன்மை மொழியாக அறிவிப்பது காலத்தின் கட்டாயம் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள், ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் வாதங்களை முன்வைக்கவும் உரிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும் எனத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்துத் தீர்ப்புகளையும் தமிழில் வழங்கும் வகையிலான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்களுக்குச் சட்டத்தமிழ், மொழிபெயர்ப்புப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் பெருமளவில் வளர்ந்துள்ள இக்காலத்தில், நேரடி மொழிபெயர்ப்பு முறைகளைப் பயன்படுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளைத் தமிழில் மேற்கொள்வது மிக எளிது என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தத் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் முழு ஆதரவு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தீர்மானம் ஒருமனத்துடன் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

இக்கோரிக்கைக்கு இந்திய அதிபரும் இந்திய அரசும் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்