தமிழ் பிச்சை கேட்க உதவாது, திருடவும் உதவாது: கமல்ஹாசன்

தமிழ் பிச்சை கேட்க உதவாது, திருடவும் உதவாது: கமல்ஹாசன்

படம்: விகடன்

05 Feb 2026 - 4:08 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியத் தேர்தல் ஆணையம் எழுத்துப் பிழைகளையும் முகவரிகளையும் முன்வைத்து வாக்களிக்கும் உரிமையை கேள்விக்குறியாக்குவதாக மாநிலங்களை உறுப்பினர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நவீன இலக்கியமும் இணையமும் உள்ளடக்கத்துக்காக எழுத்துப் பிழைகளை மன்னிக்கின்றன என்றும் தேர்தல் ஆணையம் மட்டும் மன்னிப்பதில்லை என்றும் மக்கள் நீதிமன்ற கட்சித் தலைவருமான அவர், நாடாளுமன்றத்தில் அதிபர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போது குறிப்பிட்டார்.

ஏற்கெனவே பீகார் மாநிலம், வாழும் பிணங்களின் (வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள்) தேசமாகிவிட்டது என்று குறிப்பிட்டு அவர், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.

இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை விரும்பவில்லை என்றும் இதற்காகத்தான் உச்ச நீதிமன்றத்தில் தனது சகோதரி (மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி) போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

பீகாரைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஏறக்குறைய ஒரு கோடி வாழும் பிணங்கள் காகித அளவில் உருவாக்கப்படக்கூடும் எனத் தாம் அஞ்சுவதாக திரு கமல்ஹாசன் கூறினார்.

இந்தியாவின் பல்வேறு துறை சார்ந்தவர்கள் இந்த அவைக்குள் வந்து தங்கள் மக்களுக்காகப் பேசுவதற்கு கதவைத் திறந்து வைத்துள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், தமக்கு அந்த கதவு திரைத்துறை வாயிலாக திறந்துள்ளது என்றார்.

திரைத்துறைதான் தமிழ் வரலாற்றை தனக்கு அறிமுகப்படுத்தியது என்றும் அப்போதுதான் இந்தியா என்பதை மாநிலங்களின் ஒன்றியம் என்ற அரசியல் அமைப்பு வாக்குறுதிக்கும் யதார்த்தத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைத் தாம் உணர்ந்ததாகவும் கமல்ஹாசன் கூறினார்.

மொழிப்போர் காலம் முடிந்துவிட்டது எனத் தாம் கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி இப்போது உலகம் முழுவதும் வந்துவிட்டது என்றார்.

எனவே, மொழியை வைத்து மோதலை உருவாக்க நினைப்பவர்கள் தங்களுடைய சொந்த கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்றுதான் கருதுவதாகக் குறிப்பிட்டார் கமல்.

“இன்று தமிழை, தமிழரைப் பார்த்து யாசகம் எடுக்கக்கூட உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். உங்களுக்கான நிதியைத் திரட்ட ஆங்கிலத்திலும் இந்தியிலும் யாசகம் கேட்கலாமே. தமிழ் யாசகம் கேட்க உதவாது, திருடவும் உதவாது.

தமிழன் யாசகம் கேட்க மாட்டான். அதுவும் உங்கள் யாசகத்தை ஏற்கமாட்டான்,” என்று கமல்ஹாசன் மத்திய பாஜக அரசை மறைமுகமாகவும் கடுமையாகவும் விமர்சித்தார்.

குறிப்புச் சொற்கள்
கமல்ஹாசன்நாடாளுமன்றம்