சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை செளந்தரராஜன், பாரதிய ஜனதா கருத்துகளையே சீமானும் சொல்ல ஆரம்பித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“சீமானின் ஈ.வெ.ரா. பற்றிய கருத்துகள் எல்லாம் பாஜகவின் கருத்துகள். காலம் காலமாக பாஜக சொல்லி வந்த கருத்துதான். ஆகையால் எங்களது கருத்தியலை சீமான் பேச ஆரம்பித்து இருக்கிறார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சிதான்.
“எங்கள் வழியில் வந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். எங்கள் கருத்தியலுக்கு கிடைத்துள்ள பலமாகவும், நாங்கள் இதுவரை சொல்லிக்கொண்டிருந்த கருத்தியலுக்கு ஒரு ஆதரவாகவும் இதனைப் பார்க்கிறேன். இது பாஜகவும், பாஜகவின் கருத்தியலுக்குமான வெற்றியாக பார்க்கிறேன்.
“இனிமேல் ஈ.வெ.ரா.வை பற்றிய பிம்பம் ஒவ்வொன்றாக உடைய ஆரம்பிக்கும் என்பது எனது கருத்து. பாஜகவின் ‘பி’ டீம் எல்லாம் சீமான் கிடையாது. எங்களுடைய ‘தீம்’ஐ அவர் பேசுகிறார். அவ்வளவுதான். அனைவருக்கும் தனித்தனி கொள்கை இருக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, “பாஜகவின் போட்டியை ஏற்றுக்கொள்ளும் தகுதி திமுகவுக்கு இல்லை. போர்க்களத்தில் திமுக நேர்மையான போர்வீரன் அல்ல, முதுகில் குத்துவார்கள்,” என்று சாடினார்.
“உதாரணத்திற்கு, இது அண்ணா வளர்த்த தமிழ் அல்ல; ஆண்டாள் வளர்த்த தமிழ். இது பெரியார் வளர்த்த தமிழ் அல்ல; பெரியாழ்வார் வளர்த்த தமிழ் என அவ்வப்போது நான் கூட்டத்தில் சொல்வதுண்டு,” என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
“ஆளுநரும் முதல்வரும் தங்களுடைய கருத்து வேறுபாட்டைவிட்டு ஒற்றுமையாகத் தோழமையுடன் பேசி துணை வேந்தர்கள் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே தமிழிசை செளந்தரராஜன் திங்கட்கிழமை (ஜனவரி 13) தனது இல்லத்தில் பொங்கல் பண்டிகையை பாஜக தொண்டர்களுடன் வெகுவிமரிசையாகக் கொண்டாடியுள்ளார்.
பொங்கல் பொங்கியபோது “பொங்கலோ பொங்கல், தாமரைப் பொங்கல், மோடி பொங்கல், தமிழர் பொங்கல்” என்று தொண்டர்கள் முழங்கினர்.

