கன்னியாகுமரி: குளச்சல் பகுதி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 9 பேர் கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். குளச்சல் பகுதியில் இருந்து 20 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற எண்ணெய்க் கப்பல் ஒன்று, மீன்பிடி விசைப்படகு மீது மோதியது.
மோதியதில் சேதமடைந்த விசைப்படகு கடலில் மூழ்கத் தொடங்கியது. அந்தப் படகில் இருந்தவர்களைக் காப்பாற்றாமல் எண்ணெய்க் கப்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.
நல்லவேளையாக அந்தப் பக்கமாக வந்த விசைப்படகில் இருந்த மீனவர்கள், கடலில் குதித்து மூழ்கவிருந்த 9 பேரையும் காப்பாற்றினர்.
எண்ணெய்க் கப்பல் மோதியதால் கடுமையாகச் சேதமடைந்த மீன்பிடிப்படகு கடலில் மூழ்கும் காணொளிக் காட்சி சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.