மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபத்தையும் ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இப்பாலத்தில் 600 டன் எடையிலான இரும்புப் பட்டைகளைப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அது இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் என்றும் ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பாலத்தின் நடுவில் உள்ள தூக்குப் பாலத்தை பொருத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 650 டன் கொண்ட தூக்குப் பாலத்தை ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் 22 மீட்டர் உயரத்திற்கு திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலத்தைத் திறந்து மூடுவதற்கு இருபக்கங்களில் உள்ள எடையும் சமமாக இருக்கவேண்டும் என்பதால் தூக்குப் பாலத்தின் மேலே உள்ள இரு பெட்டிகளில் தலா 300 டன் வீதம் 600 டன் இரும்பு பட்டைகளை அதி நவீன பாரந்தூக்கிகள் மூலம் ஏற்றும் பணி நடந்து வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பொறியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

