டாஸ்மாக் முறைகேடு: தமிழக அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யக் கோரி அமலாக்கத் துறை மனு

2 mins read
63c8d339-cccf-46e8-aa12-4590068969b4
சென்னை உயர் நீதிமன்றம். - படம்: ஊடகம்

சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைக்கு எதிராக தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யக் கோரி மத்திய அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.

அமலாக்க துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் வகையில், முன்கூட்டியே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

“அமலாக்க துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் வகையில், முன்கூட்டியே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.

“சோதனைக்கு எதிராக அமலாக்கத் துறையிடம் முறையிடும் மாற்று வாய்ப்பு உள்ள போதும், அதை அணுகி நிவாரணம் கோராமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியது தவறு. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்,” எனும் வாதத்தை அமலாக்கத்துறை தனது மனுவில் முன்வைத்துள்ளது.

மேலும், சோதனை நடத்துவதற்கான உத்தரவைக் காண்பித்து, ஊழியர்களிடம் வலுக்காட்டாயமாக கையெழுத்து பெற்றதாக தமிழக அரசு கூறிய குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல என்றும் அந்த உத்தரவைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.

முன்னதாக இந்த முறைகேடு தொடர்பாக சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும் அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என தமிழக அரசு தெரிவித்தது.

இதையடுத்து, மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரியும் விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் தமிழக உள்துறை செயலாளரும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

குறிப்புச் சொற்கள்