புதுடெல்லி: டாஸ்மாக் நிறுவன முறைகேடு தொடர்பான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திரும்பப் பெறப்பட்டது.
டாஸ்மாக் நிறுவனத்தில் ஏறக்குறைய 1,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்ததாக, அமலாக்கத்துறை அண்மையில் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த முறைகேடு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று (ஏப் 8) நடைபெற்றது.
அப்போது, டாஸ்மாக் வழக்கு தொடர்பான இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றமே முடிவு எடுக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு திரும்ப பெற்றது.
இதற்கிடையே, தமிழக அரசின் செயல்பாட்டை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
“டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு வந்தபோதே, உச்ச நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறி இருந்தால் விசாரணைக்குப் பட்டியலிட்டு இருக்க மாட்டோம்,” என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
குறைந்தபட்சம் நீதிமன்றத்திற்காவது நேர்மையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழக அரசு பொதுநலனுக்காக மனுத்தாக்கல் செய்துள்ளதா அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சி செய்கிறதா? என்று கேள்வி எழுப்பினர்.

