மதுரை: டாஸ்மாக் நிறுவன முறைகேடு குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விற்பனையாளர்கள் மூவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ரத்து செய்தது.
இந்த வழக்கில், டாஸ்மாக் துறையில் எந்த ஊழலையும் அனுமதிக்கக்கூடாது, துறை தனது தவறை உணரவேண்டும் என்றும் நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.
மதுரை மாயகண்ணன், முருகன், ராமசாமி தாக்கல் செய்த மனுவில் அவர்கள் டாஸ்மாக் விற்பனையாளர்களாகப் பணிபுரிந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டாஸ்மாக் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்த குற்றச்சாட்டின் பேரில் அவர்களைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்ய டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டார். அதை ரத்துசெய்யக் கோரி அந்த மூவரும் மனுத் தாக்கல் செய்தனர்.
நீதிபதி பி. புகழேந்தி விசாரணை நடத்தியதாக அவர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டது. மதுரை தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளராகப் பணிபுரிந்துவந்த ராஜேஸ்வரியும், திருமங்கலம் டாஸ்மாக் மேற்பார்வையாளர் செல்வமும் சேர்ந்து டாஸ்மாக் கடைகளில் லஞ்சம் பெற்றவந்ததாக அவர்களின் தரப்பு தெரிவித்தது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பப்பட்டதாகவும் அந்தப் புகார் மேல் நடவடிக்கைக்காக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அவர்கள் ஊடகங்களை நாடியதாகக் குறிப்பிடப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அரசாங்கத் தரப்பு, லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய புகாரை, முதுநிலை மண்டல மேலாளர் விசாரிக்குமாறு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அனுப்பியதாகத் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அவர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் மனுதாரர்களிடம் விசாரணை நடத்தி முறைகேடு புகார் நிரூபிக்கப்படவில்லை என அறிக்கை அனுப்பியதாகக் கூறியது.
அதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி, மனுதாரர்கள் மாவட்ட மேலாளர்களாகச் செயல்பட்ட உரையாடல்களையும் லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பிய புகாரில் இணைத்துள்ளனர் என்றார். மனுதாரர்கள் ஊடகங்களுக்கு சென்றது நன்னடத்தை மீறல்தான் என்றும் அவர் சுட்டினார்.
அதேவேளை, கிடைத்துள்ள ஆவணங்கள், துறையில் ஏதோ தவறு இருப்பதைக் காட்டுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
சட்டவிரோத மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கில் அரசால் டாஸ்மாக் நடத்தப்படுகிறது; அந்தத் துறையில் எந்த ஊழலையும் அனுமதிக்கக்கூடாது என்று அவர் எடுத்துரைத்தார்.
மனுதாரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு உரிமை வழங்கி மனுதாரர்கள் மீதான தற்காலிகப் பணிநீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.