சென்னை: டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத் துறையினர் ஆறு மணி நேரம் தொடர் விசாரணை மேற்கொண்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.
இது தொடர்பாக அத்துறையின் அதிகாரிகள் மே 16ஆம் தேதியன்று, சென்னையில் உள்ள, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனின் வீடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரது வீட்டுக்கு அருகே பல்வேறு ஆவணங்கள் கிழித்து வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றைக் கைப்பற்றிய அதிகாரிகள், விசாகனை சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றும் தீவிர விசாரணை நடத்தினர்.
மணப்பாக்கத்தில் உள்ள விசாகனின் வீட்டிலும் அதற்கு வெளியேயும் கைப்பற்றப்பட்ட பல ஆவணங்கள் டாஸ்மாக் முறைகேட்டுடன் தொடர்புடையவை எனக் கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாகனின் மனைவியும் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சிறிது நேரம் விசாரித்த பிறகு, அவரது மனைவியை அதிகாரிகள் அனுப்பிவிட்டனர்.
எனினும், விசாகனிடம் தொடர்ந்து ஆறு மணிநேரம் விசாரணை நீடித்ததாகவும் அப்போது கிழித்து வீசப்பட்ட ஆவணங்கள் குறித்து அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இதேபோல், பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரனுடைய ஆழ்வார்பேட்டை வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸின் உறவினர் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த சில வாரங்களாக டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, அந்நிறுவனத்தின் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
இதன் மூலம் முக்கியமான ஆவணங்கள், பணப்பரிமாற்றம் தொடர்பான மின்னிலக்க கோப்புகள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அமலாக்கத்துறை விரைவில் விரிவான அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

